நீட் விலக்கு.. தேவைப்பட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல நடத்துவோம்.. உதயநிதி ஸ்டாலின்

Su.tha Arivalagan
Oct 21, 2023,04:54 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை:  நீட் விலக்கே நமது இலக்கு.. தேவைப்பட்டால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மத்திய அரசை பணிய வைக்கும் போராட்டத்தை திமுக இளைஞர் அணி நடத்தும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


"நீட் விலக்கு.. நம் இலக்கு" என்ற கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கப்பட்டது. கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தார் திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.




அப்போது அவர் பேசியதாவது:


எனக்கு கண்களில் சிறு தொற்று வந்துள்ளது. மருத்துவர்கள் மூன்று நாட்களுக்கு எங்கேயும் போகக்கூடாது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்கள். நீட் தொடர்பான நிகழ்ச்சி ஏற்கனவே முடிவாகியுள்ளது, நான் கண்டிப்பாக செல்ல வேண்டும் எனக் கூறினேன். மருத்துவர்கள் தொடர் சிகிச்சையின் மூலம் இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். 


எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வை எழுதவில்லை. இருந்தாலும் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையாலும், ஊக்கத்தினாலும் , அவர்கள் கொடுத்த மாத்திரைகளாலும் , நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன். கண்களில் வெளிச்சம் தூசி படக்கூடாது என்பதற்காக இரண்டு நாட்கள் கண்ணாடி அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.


கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரதம் அற போராட்டத்தை எந்த உணர்வோடு மேற்கொண்டோமோ அதே உறுதியுடன் இன்று இந்த கையெழுத்து இயக்கத்தை நாம் துவங்கி உள்ளோம். இது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கழக மாவட்ட கழகங்களிலும் இந்த இயக்கத்தை துவங்கி உள்ளோம். இது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக கையெழுத்து இயக்கம் என்றாலும் இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் நாம் நீட் தேர்வை ஒழித்தாக வேண்டும் .




ஹிந்தி திணிப்பு தொடங்கி இப்போது புதிய கல்விக் கொள்கை வரைக்கும் நம் கல்வி உரிமையை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அதனை தொடர்ந்து நாமும் போராட வேண்டும். நீட் தேர்விற்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளாக போராடிக் கொண்டு வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு இன்னும் அதிகமாக எப்படி நம் கல்வி உரிமையை சிதைக்கலாம் என  சிந்திக்கின்றது.


நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற பாதிப்பை புரிந்து கொள்ள ஒன்றிய அரசு மறுக்கிறது. வீட்டுக்கு எதிராக நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் மன்றத்தில் போராடினோம். பிறகு ஆளுங்கட்சியாக வந்த பிறகு சட்டமன்றத்தில் அனைத்து பணிகளையும், கடமைகளையும், தொடர்ந்து உண்மையாக செய்து இருக்கின்றோம். நீட் விளக்கு மசோதாவை செப்டம்பர் 2021 இல் நிறைவேற்றினோம். அதை நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பினார் .


மறுபடியும், மறுநாளே பிப்ரவரி 8 செப்டம்பர் 2021ல் சட்டம் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றினோம் 

இப்போதே இந்த  மசோதா நீட் விலக்கு 21 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வால் அனிதாவில் ஆரம்பித்து ஜெகதீசன், இதுவரை 22 உயிர்கள் போயிருக்கின்றது. 


தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்த தற்கொலைகளை நிறுத்த வேண்டும். அதற்கு நம் மாணவர்களாகிய கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தை நான் மட்டும் தொடங்கவில்லை. இங்கு உள்ள அத்தனை பேரும் தான் தொடங்கி இருக்கிறார்கள். இந்த கையெழுத்தின் வெற்றி.. உங்களுடைய வெற்றி .. மாணவர்களுடைய வெற்றி  என்றார் அவர்.