லோக்சபா தேர்தல் வெற்றி ஓகே.. ஆனால் சட்டசபைத் தேர்தலில்.. திமுகவுக்குக் காத்திருக்கும்.. பெரும் சவால்

Su.tha Arivalagan
Jun 05, 2024,05:31 PM IST

சென்னை: திமுக கூட்டணி தனது இருப்பையும், ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் அழுத்தம் திருத்தமாக 2024 லோக்சபா தேர்தலில் நிரூபித்து விட்டது.. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை திமுகவுக்கு மாற்றாக மக்கள் யாரையும் தனித்து அடையாளம் காட்டவில்லை என்பதும் உண்மைதான்.. ஆனால் திமுக இனிமேல்தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.


2024 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை திமுகவுக்கு மிகப் பெரும் நெருக்குதல்கள் இருந்தன, தரப்பட்டன, அழுத்தங்கள் குவிந்து கொண்டிருந்தன, பிரச்சினைகள் சுற்றி வளைத்திருந்தன. இதையெல்லாம் தாண்டித்தான் தனது கூட்டணியை வலுவாக அமைத்தது, தொகுதிப் பங்கீட்டையும் சுமூகமாக முடித்தது, தேர்தல் உத்திகளையும் வகுத்தது.. பற்பல சிக்கல்களையும் தாண்டி தனது பிரச்சாரத்தையும் அனல் பறக்க மேற்கொண்டது திமுக.  எல்லா நெருக்கடிகளையும் தாண்டி இன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான ஒரு பிரமாதமான வெற்றியை, பிரமாண்டமாக வாரி எடுத்து வந்துள்ளது திமுக.. No doubt!




மொத்த வட இந்தியாவும் தமிழ்நாட்டை மீண்டும் ஆச்சரியத்துடனும், அதிசயமாகவும் பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எல்லாப் பக்கமும் வேறு மாதிரி தீர்ப்புகள் வந்தால் உங்க ஊர்ல மட்டும் எப்படி இப்படி என்று வட இந்திய ஊடகத்தினர் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்கும் அளவுக்குத்தான் எப்போதுமே தமிழ்நாடு தீர்ப்பளித்து வந்துள்ளது. இந்த முறையும் அதே தீர்ப்பையே மக்கள் அச்சுப் பிசகாமல் கொடுத்துள்ளனர்.


சிதறிக் கிடக்கும் எதிர்ப்புகள் இணைந்தால்




இதுவரை நடந்தது எல்லாமே திமுகவுக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் இனிமேல்தான் திமுக கவனமாக இருக்க வேண்டும். காரணம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் வரவுள்ளது. இந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும்.. அதுதான் திமுகவின் பிரதான எண்ணமும் கூட.. அந்த இலக்கையும் சுமூகமாக அடைய பல விஷயங்களை திமுக செய்தாக வேண்டும். 


முதலில் திமுகவை எதிர்க்க யாரும் வலுவாக இல்லை என்ற எண்ணத்தை  விட்டு விட வேண்டும். காரணம், வலுவான எதிர்ப்பு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் சிதறிக் கிடக்கும் எதிர்ப்புகள் ஒருங்கிணைந்து விட்டால் நிச்சயம் அது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். அது திமுகவுக்கும் தெரிந்திருக்கும். இந்த விஷயத்தில் திமுக கவனுடன் நடக்கும் என்றும் நம்பலாம்.


தேர்தல் முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள் ஒரு முக்கியத் தகவலை சொல்கிறது. அது அதிமுக - பாஜக கூட்டணிகள் தனித் தனியாக  வாங்கிய வாக்குகளையும், வாக்கு சதவீதத்தையும் கூட்டினால், திமுகவுக்கு நிகரான பலம் வருகிறது. அதை எளிதில் புறம் தள்ளி விட முடியாது இவர்கள் இருவரும் மீண்டும் சேருவார்களா என்பதை விட சேர்ந்தால் என்னாகும் என்பதுதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.


அதிர வைக்கும் வாக்கு சதவீதம்


அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட23 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 18.2 சதவீதம். இரண்டையும் கூட்டினால் கிட்டத்தட்ட 42 சதவீத வாக்குகள் வருகின்றன. திமுக பெற்ற வாக்குகள் 47 சதவீதம். அப்படியே அந்தப் பக்கம் திரும்பினால் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை சுருட்டியுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிமுக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகமாக உள்ளன (இதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளே போட்டியிட்டிருந்தாலும் கூட ஆபத்து ஆபத்துதானே).  12 தொகுதிகளில் பாஜக 2வது இடத்தைப் பிடித்துள்ளது.  இதையெல்லாம் சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது.


ஒரு பேச்சுக்கு - அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி இணைவதாக வைத்துக் கொள்வோம்.. நிச்சயம் திமுகவுக்கு பெரும் சிக்கல் வரும்.. இதை விட இன்னொரு புதிய சிக்கலும் காத்திருக்கிறது.. அது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு. 2026தான் எங்களது இலக்கு, கப்பு முக்கியம் பிகிலு என்று அவர் ஏற்கனவே சொல்லி விட்டு துண்டையும் போட்டு வைத்து விட்டுப் போயிருக்கிறார். கையில் உள்ள படத்தை முடித்து விட்டு அவர் களம் இறங்கும்போது அது எப்படி மாறும் என்பது பலத்த எதிர்பார்ப்புக்குரியது.


கமல்ஹாசனை இழுத்தது புத்திசாலித்தனம்




திமுகவைப் பொறுத்தவரை இந்த லோக்சபா தேர்தலில் புத்திசாலித்தனமான வேலையைச் செய்தது. அது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை தன் பக்கம் இழுத்தது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரம் திமுகவுக்குக் கை கொடுத்தது என்பதை விடவும், அவரது கட்சியால் பிரியும் வாக்குகளை சிதறாமல் தன் பக்கம் ஈர்த்தது திமுகவின் சாதுரியமாக பார்க்கப்படும். வரும் சட்டசபைத் தேர்தலிலும் கமல்ஹாசன் கட்சிக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் இந்த ஆதரவையும், வாக்குகளையும் தக்க வைக்க முடியும் என்பது திமுகவின் நம்பிக்கை.


இது மட்டுமல்லாமல் வருகிற சட்டசபைத் தேர்தலின்போது பாமகவை தன் பக்கம் இழுக்கவும் திமுக தயங்காது என்றும் நம்பப்படுகிறது.  பாமகவை மட்டுமல்லாமல் தேமுதிகவையும் சேர்த்து அது இழுக்க முடிவு செய்தால் நிச்சயம் திமுகவின் பலம் உயரும், அதேசமயம், பாஜக, அதிமுகவின் திட்டங்களும் தகரும். இதெல்லாம் ஊகங்கள்தான்.. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் எல்லா வாய்ப்புகளும் இப்போது ஓபன் ஆகவே உள்ளன.


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு அந்தக் கட்சிக்கு ஒரு தோல்வி கூட கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக 8 பெரிய வெற்றிகளை அக்கட்சி பெற்றுள்ளது. அதில் இரண்டு லோக்சபா தேர்தல்கள், ஒரு சட்டசபைத் தேர்தல் வெற்றி என்பது மிகப் பெரிய வரலாறு. திமுக வரலாற்றில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே வேறு எந்தக் கட்சியும் இப்படி தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டியது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்களே சாதிக்காத வெற்றியை ஸ்டாலின் சாதித்துள்ளதால் எந்த ரூபத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் அதை சமாளிப்போம் என்று திமுகவினர் புன்னகையுடன் கூறுகிறார்கள்.