பாஜகவை உதறிய அதிமுக.. "இது டிராமா".. கலாய்க்கும் திமுக கூட்டணி!

Su.tha Arivalagan
Sep 26, 2023,10:23 AM IST

சென்னை: பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக  அதிமுக எடுத்துள்ள முடிவு ஒரு நாடகம் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் பலவும் கூறி வருகின்றன. அவர்கள் நாடகமாடுகிறார்கள். விரைவில் மீண்டும் இணைவார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. அடுத்தடுத்து அவர் ஜெயலலிதா, அண்ணா ஆகியோர் குறித்து விமர்சித்துப் பேசியதால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது.




கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருப்பதாக அதிமுக தலைவர்கள் அறிவித்தனர். இது அதிமுகவினர் மத்தியில் பெரம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் இதை அவர்கள் கொண்டாடினர்.


இப்படி ஒரு முடிவைத்தான் அறிவிப்பார்கள் என்று ஏற்கனவே அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர் போலும். இதனால் அதிமுக தலைமைக் கழக அலுவலகப் பகுதியில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளையும், இனிப்புகளையும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தனர். அவர்களது உற்சாகம் மிகப் பெரிதாகவும் இருந்தது. ஒருவேளை அதிமுக -பாஜக கூட்டணி தொடர்பாக நேற்று எந்த முடிவும் எடுக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் பெரும் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்புண்டு.


அதிமுகவினர் இப்படிக் கொண்டாடி வரும் நிலையில் பாஜகவினர் அமைதி காக்கின்றனர். யாரும் அதிமுக தலைவர்களை விமர்சித்துப் பேசவில்லை. ஒரு சிலர் கருத்து கூறினாலும்  கூட பின்னர் அதை நிறுத்தி விட்டனர். யாரும் அதிமுக தலைவர்களை கடுமையாக பேசவில்லை. ஒன்றுமே நடக்காதது போல அவரவர் வேலையைப் பார்த்து வருகின்றனர். 




அதேசமயம் திமுக கூட்டணிக் கட்சிகள் பலவும், இந்த கூட்டணிப் பிரிவு என்பது ஒரு தற்காலிகமானதே.. இது ஒரு நாடகம்.. அதிமுகவினரையும், மக்களையும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் இதுதான்:


- அண்ணாமலை மீது மட்டும்தான் அதிமுக தலைமை கோபத்தில் உள்ளது. நாளைக்கே அண்ணாமலையை மாற்றி விட்டால் உடனே மீண்டும் தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் அதிமுக சேர்ந்து விடும்.


- சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவை விட்டு பிரிந்து விட்டது. இதை மீண்டும் பெற பாஜக கடுமையாக முயலுகிறது. அதற்காக பாஜக மேலிடத் தலைமையும், அதிமுக தலைமையும், அண்ணாமலையுடன் இணைந்து போட்ட திட்டம்தான் இவையெல்லாம். சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பக்கம் எளிதாக மடை மாற்ற பாஜகவை விட்டு அதிமுக வந்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்.


-  பாஜகவுடன் கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுகவின் 2ம் கட்டத் தலைவர்கள்தான் சொல்லியுள்ளனர். ஆனால் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை எடப்பாடி பழனிச்சாமிதான் அறிவித்திருக்க வேண்டும். அவர் ஏன் அதைச் செய்யவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் அவரது பெயரில்தான் வெளியாகும் அல்லது அவரேதான் வெளியிடுவார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.


- பாஜகவைப் பொறுத்தவரை தென்னகத்தில் மிக முக்கியமான கூட்டணிக் கட்சி அதிமுகதான். டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கூட பிரதமர் மோடிக்கு அருகில் அமர வைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. கிட்டத்தட்ட மோடியின் வலது கரம் போல பார்க்கப்பட்டார். அப்படிப்பட்ட பெரிய கட்சி வெளியேறியுள்ளது, ஆனால் தேசிய கூட்டணிக் கட்சியின் தலைமை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கமுக்கமாக இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. இன்னேரம் அவர்கள் பதறியிருக்க வேண்டாமா.. ஓடி வந்து சமரசம் பேசியிருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் எதுவுமே நடக்காதது போல அவர்கள் இருப்பது சந்தேகத்தை அதிகரிப்பதாக உள்ளது என்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சொல்கிறார்கள்.


இது நிஜமா.. பொருத்திருந்து பார்ப்போம்.