"தமிழ்நாடு இருக்கும் வரை".. பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம்.. தலைவர்கள் அஞ்சலி!

Manjula Devi
Feb 03, 2024,10:48 AM IST
சென்னை: முன்னாள் முதல்வரும், தமிழ்நாட்டுக்கு அந்தப் பெயரை வைத்தவரும், திமுகவை நிறுவியவருமான பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

"அண்ணா.. அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பில்.. என்றும் அண்ணா".. என்பது போல எத்தனை வருடங்கள் ஆனாலும் அண்ணாவின் நினைவுகள் நம்மை விட்டு நீங்காது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.. அதேபோல குறுகிய காலமே அண்ணாவின் ஆட்சியை தமிழ்நாடு பார்த்தாலும் கூட, அந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் சரித்திரத்தில் இடம் பெற்றவையாகும்.



திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனி கட்சி ஆரம்பித்து பல்வேறு கொள்கைகளையும், சவால்களையும், சாதித்து சரித்திர நாயகனாக வாழ்ந்தவர் அண்ணா. காங்கிரஸ் வசம் இருந்து வந்த தமிழ்நாட்டை, திராவிடத்தின் பக்கம் திருப்பிக் கொண்டு வந்தவர். இவரது ஆட்சிதான் முதல் "திராவிட மாடல் ஆட்சி" என்று சொல்லலாம். தமிழக முதல்வராக அசத்தியவர். 

தமிழ்நாடு என்ற பெயர் சூட்டியவர்.. தமிழ்நாடு வாழும் வரை அண்ணாவும் வாழ்வான் என்று பெருமிதமாக முழங்கியவர். சுயமரியாதைதத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொண்டு வந்த புரட்சியாளர். இரு மொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் நிலவும் என்று உறுதிபட கூறியவர்.. இன்று வரை அதுவே தொடர்கிறது.

அப்படிப்பட்ட அண்ணா மறைந்த தினம்தான் பிப்ரவரி 3.  அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திமுக சார்பில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இறுதியில் அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து தொடங்கி அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் இருப்பதால், அவருக்குப் பதில் துரைமுருகன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி புகழாஞ்சலி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக தலைவர்கள் கே.பி. முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பா. வளர்மதி உள்ளிட்டோரும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் வந்திருந்தனர்.

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், சமூகவியல் கொள்கையாக இருந்த திராவிடத்தை ஒப்பற்ற அரசியல் தத்துவமாக மாற்றியவரும், ஆட்சிக் கட்டிலில் திராவிடத்தை அமரச் செய்து, மாநிலத்தின் பெயர் முதல் அரசின் பதவிகள், கோப்புகள் வரை "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என 
நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து அதனை தமிழ்மயமாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு கண்ட , கழகத்தின் முதல் எழுத்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன், தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் #பேரறிஞர்அண்ணா அவர்கள் நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றைப் தொடர்ந்து பேணிக் காத்திடுவோம்! என்று கூறியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அமமுக தலைவர் டிடிவி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைரமுத்துவின் கவிதாஞ்சலி

அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த கவிதை:

இருமொழிக்கொள்கை
இறந்துபடவில்லை

மாநில சுயாட்சிக்கான
காரணங்கள் இன்னும்
காலமாகிவிடவில்லை

பகுத்தறிவின் வேர்கள்
பட்டுவிடவில்லை
இனமானக் கோட்டை
இற்றுவிடவில்லை
சமூக நீதிக்கொள்கை
அற்றுவிடவில்லை

மதவாத எதிர்ப்பு
மாண்டுவிடவில்லை

எப்படி நீமட்டும்
இறந்துபடுவாய் அண்ணா?

நிழல் விழுந்தால்
பொருள் இருக்கிறது
என்று பொருள்

லட்சியம் வாழ்ந்தால்
அந்த மனிதன் வாழ்கிறான்
என்று பொருள்

இன்னும் நீ இருக்கிறாய்
அண்ணா!
எங்கள் கொள்கை வணக்கம்.