மக்களவைத் தேர்தல் 2024 : இன்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுஆலோசனைக் கூட்டம்
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. மேலும் நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து மாவட்ட வாரியாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. சேலம் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வா வேலு, தங்கம் தென்னரசு , உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதியில் கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணி கட்சியினரின் பலம் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் நீலகிரி,திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.