மும்மொழிக் கொள்கையை எதிர்த்து.. நாளை திமுக கூட்டணி சார்பில்.. கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: மும்மொழி கொள்கையை எதிர்த்தும்,மத்திய அரசை கண்டித்தும் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தேசிய கல்விக் கொள்கை எனப்படும் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து, இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்திற்கு சேர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி என கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேபோல் காங்கிரஸ், அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் நாளை அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் மநீம, மதிமுக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம். அதை உணர்த்துவோம் என்றும் ஒன்றிணைவோம் உரக்க குரல் எழுப்புவோம். உரிமைகளை மீட்போம் என கூட்டணிக் கட்சிகள் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.