திமுகவில் தொகுதிப் பங்கீடு தொடங்கியது.. முஸ்லீம் லீக்குக்கு ராமநாதபுரம்.. கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல்

Su.tha Arivalagan
Feb 24, 2024,07:53 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின நிலையில் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக ஒதுக்கி உடன்பாட்டிலும் இரு கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன. அதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக குழு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. 2வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது.




இந்த நிலையில் 3 கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டது. இதில் கடந்த தேர்தலில் ஈரோட்டில் மதிமுகவும், நாமக்கல்லில் கொ.ம.தே.க.வும்,  ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.


ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் மீண்டும் போட்டி


இதே தொகுதிகள் இந்தத் தேர்தலிலும் இக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியான நிலையில் தற்போது முதல் ஒப்பந்தம் வெளியாகியுள்ளது. அதாவது முஸ்லீம் லீக் கட்சியுடன் முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி மீண்டும் ராமநாதபுரம் தொகுதியேலேயே அக்கட்சி போட்டியிடவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகைதீன் ஆகியோருக்கு இடையே இன்று இரவு கையெழுத்தானது. 


கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடவுள்ளார். தனது தேர்தல் சின்னமான ஏணி சின்னத்திலேயே முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் என்றும் காதர்மொகைதீன் தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


நாமக்கல் - கொமதேகவுக்கு


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையும் இதே தொகுதியில்தான் இக்கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், கொமதேக கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனும் கையெழுத்திட்டுள்ளனர்.