அதிகரிக்கும் தொண்டர்கள் கூட்டம்.. விஜயகாந்த் உடல்.. நாளைத் தீவுத் திடலுக்கு மாற்றப்படுகிறது
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக அவரது உடல் நாளை காலை தீவுத் திடலுக்கு மாற்றப்படவுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சியினர் குவிந்து வருகின்றனர். காலையில் கூட்டம் சற்று குறைவாக இருந்த நிலையில் தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் தொண்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். சில நூறாக இருந்த தொண்டர்கள் எண்ணிக்கை தற்போது பல்லாயிரக்கணக்காக மாறியுள்ளது.
கோயம்பேடு தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில்தான் தற்போது விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வசதிக் குறைவாக இருப்பதால் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வேறு இடத்திற்கு விஜயகாந்த் உடலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தற்போது விஜயகாந்த் உடல் நாளை காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு மாற்றப்படவுள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிற்பகல் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும். பூந்தமல்லி சாலை வழியாக இறுதி ஊர்வலம், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு வந்து சேரும். அங்கு மாலை 4.45 மணிக்கு உடல் நல்லடக்கம் நடைபெறும்.
முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.