மறைந்தார் விஜயகாந்த்... வீட்டில் திரண்ட தொண்டர்கள் கதறி அழுகை.. அரைக் கம்பத்தில் தேமுதிக கொடி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்துள்ள செய்தி அவரது தொண்டர்களை உடைந்து போகச் செய்துள்ளது. விஜயகாந்த் வீட்டில் திரண்டுள்ள தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர். அவரது உடல் ஏற்றிச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸை ஆண்களும், பெண்களும் அடித்து கதறிக் கதறி அழுத காட்சி நெஞ்சை பிளப்பதாக இருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டார்.
அவர் மீண்டும் திரும்பி விடுவார் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்த தொண்டர்களை இது பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் தொண்டர்கள் கதறி அழுது கொண்டுள்ளனர். அவரது உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் விஜயகாந்த் வீட்டை நெருங்கியபோது ஆண்களும், பெண்களும் ஆம்புலன்ஸை முற்றுகையிட்டு அடித்துக் கொண்டு கதறினர். அவரது முகத்தைப் பார்க்க துடித்தனர்.
சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டுள்ளனர். தொடர்ந்து பலரும் குவிந்து வருகின்றனர். கண்ணீர் விட்டு அழுதபடி உள்ளனர். விஜயகாந்த்தின் மரணச் செய்தியை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. கேப்டன் கேப்டன் என்று கூறியபடி கதறி அழுத காட்சி பார்ப்போர் உள்ளங்களை அதிர வைப்பதாக உள்ளது.
எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த, எத்தனையோ பேருக்கு உதவிய, எத்தனையோ பேரை தூக்கி விட்ட, திரையிலும் நேரிலும் கம்பீரமாக பார்த்துப் பழகிய தங்களுடைய கேப்டன் இன்று இல்லை என்பது தொண்டர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் விஜயகாந்த் குணமடைந்து மீண்டும் கம்பீரமாக வர வேண்டும் என்ற அவர்களின் ஏக்கம் கானல் நீராகப் போய் விட்டது.