விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் குலக்கல்வியா?.. கி. வீரமணி கண்டனம்

Su.tha Arivalagan
Aug 19, 2023,10:19 AM IST
சென்னை:  மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கத்தான் வேண்டுமா? . அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்ததுபோல் இதையும் விரட்டியடிப்போம்!. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து களம் அமைப்போம். திராவிட மாடல் அரசு கடுமையாக எதிர்க்கும் - எதிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணியின் அறிக்கை:

வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை - ஜாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடாகும்.



மோடி ஆட்சியில் குலதர்மப் பாம்பு படமெடுக்கிறது!

இப்போது மீண்டும் ஆரியத்தின் ஆணிவேரான பே(வ)தத்தினை - படிக்கட்டு ஜாதி முறையை -Graded inequality  என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்திய பேத ஒழிப்புக்கு எதிராக, மனித சமத்துவத்தை வெடி வைத்து, உயர்ந்தவன் - தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது - இப்போதும்!

‘‘விஸ்வகர்மா திட்டம்‘’ என்பதின்படி ஒரு புதிய குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அந்த ‘‘கீழ்ஜாதியர் அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் - அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்டு 15 ஆம் நாளில் டில்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.
16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா’’ (‘‘PM Viswakarma’’) திட்டம் என்பதை அமைச்சரவையின் பொருளாதார குழு ஏற்று 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாம்! பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு - சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சியாம்! 

2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார்களாம். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாயாம்! 18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்களாம்!

சனாதனத்தின் முழு வீச்சு!

என்னே கொடுமை! சனாதனத்தின் முழு வீச்சுத் திணிப்பல்லவா இது! வர்ணாசிரம வக்கிரத்தின் அக்கிரமம் அல்லவா இது!  தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குயவன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் - விளக்குமாறு கட்டும் தொழில்  (Broom Maker), பொம்மை செய்தல், சிரைக்கும் தொழில்(Barber), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், சலவைத் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வருமாம்!

இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மானிய அடிப்படையில் கடன் அளிப்பார்களாம்! தூண்டில் எவ்வளவு லாவகமாக அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா?

நம் நெஞ்சங்கள் சமூகநீதிக்காகப் போராடிப் போராடி, சலவைத் தொழிலாளியின் மகன் மீண்டும் அதே தொழிலில் போய் அவமானமும், தற்குறித்தனத்தையும் பெறாமல், திராவிடம் முயன்று அவரைப் படிக்க வைத்து அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக்கி வெற்றி கண்டது!

திராவிடத்தின் அடிப்படையே ஆரிய வர்ண தர்மமும், குலத்தொழிலும் அல்ல! ஆடு மேய்ப்பவர்களையும் - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். ஆக்கி, அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பதே!

அதுதானே உண்மையான சமூக மாற்றமாக இருக்க முடியும்? இளைஞர்களே, நீங்கள் உங்கள் குலத்தொழிலைச் செய்தாக வேண்டும் என்றால், நிரந்தர இழிவும், அடிமைத்தனமும்தான் உங்களுக்குக் கிட்டும் - இந்த ஆரிய ஆர்.எஸ்.எஸ். சனாதன ஆட்சியில்!

திருக்குறள் பிறந்த மண்ணில் குலக்கல்வியா?

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’

என்ற குறள் பிறந்த மண்ணில் இப்படி மீண்டும் குலக்கல்வியா? அதுவும் அனைத்து இந்தியாவிலும் என்றால், இதைவிட கடைந்தெடுத்தப் பிற்போக்குத்தனம் உண்டா? முன்னேற்ற கடிகாரத்தை தலைகீழாகத் திருப்பி வைப்பதா?

இதுபற்றிக் கண்டனக் குரலினை அத்துணை முற்போக்கு - ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் காண விரும்பும் அனைவரும் - ஒன்றுபட்டு உடனடியாக ஓர் அணியில் திரண்டு எழுந்து எதிர்ப்புக் கடலாய்ப் பொங்கி எதிர்த்து இத்திட்டத்தை கருவிலேயே அழித்து, குலத்தொழில் பாதகத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.