மின்னல் வேகத்தில் முடிந்த தீபாவளி டிக்கெட் முன்பதிவுகள்... ஏமாற்றத்தில் பயணிகள்..

admin
Jul 01, 2024,05:35 PM IST

சென்னை : தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


ரயில் டிக்கெட்களை, பயணம் செய்வதற்கு120 நாட்களுக்கு முன்பாகவே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி இணையதளம் இதற்கான வசதிகளை செய்துள்ளது. இதனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம். 


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனால் அதற்கு முன்பாகவே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் விரும்புவார்கள். அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.




அக்டோபர் 28ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஜூன் 30ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 01ம் தேதியான இன்றும், அக்டோபர் 30ம் தேதி ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ஜூலை 02ம் தேதியான நாளையும் முன்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அக்டோபர் 28ம் தேதியை விட அக்டோபர் 29ம் தேதியே சொந்த ஊருக்கு செல்வதற்காக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டன. அக்டோபர் 28ம் தேதி செல்வதற்கு வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், அதிகமானவர்கள் அக்டோபர் 29ம் தேதி ஊர்களுக்கு செல்வதற்காகவே முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கே அதிகமானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். 


முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு, காலியாகி விட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் அக்டோபர் 28, 29,30 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வரும் காத்திருக்கலாம். அல்லது பயண நாளுக்கு முந்தைய நாள் டிக்கெட் முன்பதிவு செய்யும் தட்கல் முறையில் தங்களின் பயண டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.