தீபாவளி டிக்கெட் புக்கிங்.. அக்., 30ம் தேதிக்கான ரயில்களுக்கு முன்பதிவு... 5 நிமிடத்தில் காலி!
சென்னை: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. அக்., 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது. இதனால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் மற்றும் படிப்பு தொடர்பாக தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதற்கு பஸ் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். அதன்படி ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கிட்டதட்ட 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 28ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஜூன் 30ம் தேதியும், அக்டோபர் 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 01ம் தேதியான நேற்றும், அக்டோபர் 30ம் தேதி ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்றும் நடைபெற்றது.
அக்டோபர் 28,29ம் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே விற்று தீர்ந்து வெயிட்டிங் லிஸ்டிற்கு சென்றது. அக்டோபர் 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. இன்றாவது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடவேண்டும் என்று பலரும் காத்திருந்த நிலையில், அதுவும் தொடங்கிய 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று தற்போது மக்களின் காத்திருப்பு தொடங்கியுள்ளது.