Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

Manjula Devi
Oct 25, 2024,04:42 PM IST

- மஞ்சுளாதேவி


தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடைகள் தான். அந்த காலகட்டத்தில் மக்கள் தீபாவளிக்கு தான் புது துணி எடுப்பார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் தீபாவளிக்கு மட்டும் தான் புத்தாடைகளை வாங்குவர். தீபாவளியை விட புதுத் துணி வாங்குவதுதான் பெரிய விஷயமாக இருக்கும்.


தீபாவளிக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே திருவிழாவுக்கு குடும்பத்தோடு போவது போல, கடைவீதிகளுக்கு சென்று துணிகள் எடுத்து வருவார்கள். அப்பாக்களிடம் பிள்ளைகள் நைஸ் பண்ணி, கெஞ்சி, தாஜா செய்து தங்களுக்கு வேண்டியதை வாங்கும் சரியான தருணம் இந்த டைம்தான். அது பலருக்கும் மறக்க முடியாத நினைவகளாக இருக்கும். அடுத்து துணியை தைக்க கொடுக்கம் படலம்.


டெய்லருக்காக காத்திருந்த காலம்: நமக்குப் பிடித்த டெய்லர் ஒருவர் இருப்பார். அவரிடம்தான் வழக்கமாக கொடுப்போம். துணியை எடுத்துக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்து விட்டு, எப்படா புது டிரஸ் வரும் என்று மனசு அலைபாய காத்திருப்போம். அதிலும் தீபாவளி நெருங்க நெருங்க எப்போது தைத்த துணிகள் வீட்டிற்கு வரும். அளவு சரியாக இருக்குமா? நாம சொன்ன மாதிரியே சரியாக தைச்சிடுவாங்களா என ஒவ்வொரு நாளும் திக் திக் என்ற நிமிடங்களுடன் காத்திருப்போம்.


தைக்க கொடுத்த துணி எல்லாம் தைத்து வந்த பிறகு அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது.. அந்தக் காலம்!  இந்த நிலைமை எல்லாம் தற்போது தலைகீழாக மாறி உள்ளது. ஏனென்றால் தீபாவளிக்கு துணி எடுத்து தைக்கும் அந்தப்  பழமையான முறை மாறிவிட்டது. தற்போது இந்த பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. 


துணி எடுத்துத் தைத்து போடுவது என்பது குறைந்து போய் விட்டது. அரிதாகத்தான் மக்கள் துணி எடுத்து தைத்து வருகின்றனர். எல்லாமே ரெடிமேடு மயமாகி விட்டது. இதனால் தையல் கலை தற்போது நலிவடைந்து வருவதால், காலம் காலமாக இதை சிறு தொழிலாக செய்து வரும் டெய்லர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதோடு  நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.




டெய்லர்களின் இன்றைய நிலை: இந்த நிலையில் தற்போது தையல் தொழிலின் நிலைமை என்ன.. ஏன் நிலைமை மாறிவிட்டது அதற்கு காரணம் என்ன என்பது பற்றி திருவாரூரைச் சேர்ந்த பெண் தையல் கலை நிபுணர் பா. கெளரி நமக்காக பிரத்யேக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இதில் அவர் தற்போது டெய்லர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.. அவரது கருத்துக்கள் இதோ:


கடந்த ஐந்து வருடம் முன்பு வரை தீபாவளி என்றால் நைட் வேலை, பிசியான ஷெட்யூல் என ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். ஆனா இப்பொழுது இது குறைந்து விட்டது. இதற்கு காரணம் என்ன..?


தையல் தொழிலில் வேலை இல்லாமல் வருமான குறைவதற்கு காரணம் ரெடிமேட் ஆடைகள் வந்ததுதான். ரெடிமேட் வருவதற்கு முன்னாடி எப்படி இருந்தது என்றால், பத்து வருடம் முன்பு வரை தீபாவளி என்பது தையல் நிபுணர்களுக்கு மிகப்பெரிய கண்டத்தை தாண்டுவது போல் இருக்கும்.  ரம்ஜான் பக்ரீத் காலகட்டத்திலும் இது போல தான் இருக்கும். தீபாவளி நேரத்தில் எல்லாம் தூக்க மயக்கத்தில் தான் இருப்போம். திடீரென எழுந்திரித்து தைப்போம். 


அப்படியும் முடியாது. அதனால 15 நாட்களுக்கு முன்பாகவே இனி துணிகள் வாங்க மாட்டோம் என ஹவுஸ்புல் போர்டு வைத்து விடுவோம். எனது டெய்லரிங் இன்ஸ்டிடியூட்டுக்கு எல்லாம் ஒரு மாதம் முன்பாகவே விடுமுறை கொடுத்து விடுவேன். தீபாவளி முடிந்து டைலரிங் கிளாஸ்க்கு வாங்க என முன்கூட்டியே சொல்லி விடுவேன். தீபாவளிக்கு வருவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு குறைந்தது 12 மணி வரை வேலை பார்ப்பேன். இப்படி எல்லாம் தீபாவளி நேரத்தில் பரபரப்பாக வேலை நடைபெறும். ஆனால் இப்ப அப்படி இல்லை. ரெடிமேட் ஆடைகள் வந்ததிலிருந்து டைலரிங் தொழிலுக்கு கடுமையாக அடி விழுந்து விட்டது.


பெண்களுக்கு ரெடிமேட் சுடிதார் வந்து விட்டது. அதேபோல ஆண்களுக்கான ரெடிமேட் சட்டை மற்றும் பேண்ட்டும் டைலரிங் தொழிலுக்கு பெரும் பாதிப்பைக் கொடுத்து விட்டன. இதனால் ஆண் டெய்லர்களுக்கும் தையல் தொழிலில் பெரும் சறுக்கல் ஏற்பட்டது. முன்பெல்லாம் ஆண்கள் பெண்கள் அணியும் துணிகளை தைக்க மாட்டார்கள். ஆண்கள் சட்டை பேண்ட்கள் மட்டுமே தைப்பார்கள். ஆனால் ரெடிமேட் சட்டைகள் வந்த பிறகு ஆண்களும் பெண்களுடைய ஆடைகளை தைக்க ஆரம்பித்து விட்டனர்.


அதே போல, ஒரு ரெண்டு வருடத்துக்கு முன்பிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங் ட்ரெண்டிங்குக்கு வந்து விட்டது. என்ன வேணும்னாலும் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மக்கள் அந்த துணியின்  தன்மை எப்படி இருக்கிறது? அதோட தையல் எப்படி இருக்கிறது.. அளவு சரியாக இருக்கிறதா என்ற எதையும்  பார்ப்பதில்லை. அளவு பெரிதாக இருந்தாலும் சரி ஆல்டர் பண்ணிக் கொள்ளலாம் என பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். 


நினைத்த நேரத்தில் வாங்கும் சூழல்: முன்பெல்லாம் தீபாவளிக்கு மட்டும் தான் நாலஞ்சு டிரஸ்  எடுப்பார்கள். அதிலும் வருடத்திற்கு ஒரு முறை தானே புது துணி எடுப்பார்கள். அதனால் நல்ல துணிகளாக எடுக்க வேண்டும் என ஆர்வத்துடன் கடை கடையாக சென்று ஒரு அலசு அலசுவர். ஆனால் இப்போது அந்த நிலைமை கிடையாது. ஏனெனில் குறைந்த விலையில் எப்போதெல்லாம் புதுத்துணிகள் வாங்க வேண்டுமோ அப்போதெல்லாம்  ஆன்லைனில் வாங்கி அணிந்து கொண்டு, வேணாம் என்றால் தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஃபாரின் கல்ச்சர் போல் ஆகிவிட்டது. 


தற்போது 500 ரூபாய்க்கு மூன்று டாப் லெக்கின்ஸ் என கிடைப்பது போன்றே, இந்த வருடத்தில் இருந்து டிசைனர் ரெடிமேட் பிளவுஸ்களிலும் மக்கள் நாட்டத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர். அதேபோல் மே ஜூன் மாதங்களில் யூனிபார்ம் தைக்க களைகட்டும். தற்போது உள்ள சூழ்நிலைகளில் யூனிஃபார்மும் ரெடிமேடுகளாக மாறிவிட்டன.  இப்படி மேலும் மேலும் தையல் தொழில் சரிவை சந்தித்துக் கொண்டே செல்கிறது. 


குறிப்பாக பெரிய கார்மெண்ட்ஸ் வைத்திருப்பவர்கள் மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து லாபம் ஈட்டி விடுகிறார்கள். ஆனால் சிறிய அளவில் தையல் தொழில் செய்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொழிலில் பெரும் அடி வாங்கி விட்டார்கள். 




தற்போது ரெடிமேட் ஆடைகளின் நாட்டம் வந்த பிறகு வருமானம் எப்படி இருக்கிறது..?


கடந்த வருடத்து லாபம் இந்த வருடத்தில் பாதி கூட கிடையாது. தீபாவளி என்பது தையல் கடைகளுக்கு மிகவும் ஸ்பெஷல். அதேபோல் ரம்ஜான் மற்றும் பக்ரீத்துக்கும். ஏனெனில் இந்த நாட்களில் தைக்க வந்த துணிகள் முழுவதும் தைத்து முடித்த பிறகு கடை முழுவதும் துணிகளால் சூழ்ந்திருக்கும். தீபாவளிக்கு முதல் நாள் தைத்த துணிகளை டெலிவரி செய்வோம். அப்போது டெலிவரி பண்ணும் போது பேக் முழுவதும் பணமாக இருக்கும். இப்போ அப்படி கிடையாது. 


தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் தைக்கவே துணிகள் வருகிறது. தையல் கலையும் சமையல் கலையும் எப்போதும் அழியாது என நான் எப்போதுமே அனைவரிடமும் கூறுவேன். இந்த இரண்டு கலைகளும் தெரிந்தவர்களுக்கு என்றுமே கவலை கிடையாது. என்றைக்குமே சொந்தக் காலில் நிற்கலாம் எனவும் கூறுவேன். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் என்னிடம் உள்ள தன்னம்பிக்கையே போய்விட்டது.


டெய்லரிங் தொழிலை மேம்படுத்த மாற்று வழி எதுவும் உண்டா?


இதற்கு மாற்று வழி உண்டு என்றால் நம்மளும் விதவிதமான துணிகளை வாங்கி தைத்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.


வருமானம் குறைந்த நிலையில், அந்த வருமானத்தை தொழிலாளர்களுக்கு எப்படி கொடுத்து நிகர் செய்வீர்கள்?


என்னிடம்  டெய்லரிங் கற்றுக் கொண்டவர்கள் தான் என்னிடம் டெய்லராகவும் பணிபுரிந்தார்கள். பத்து பேர் இருந்த இடத்தில் தற்போது ஐந்தாகிவிட்டது. அதிலும் இப்போது இரண்டாகிவிட்டது. அவர்களும் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது உள்ள தையல் தொழிலில் நான் தைக்கும் அளவிற்கு மட்டுமே தான் துணிகள் வருகிறது. அதனால் தொழிலும் நலிவடைந்து விட்டது. வருமானமும் குறைந்துவிட்டது.


பேசாம கடைய மூடி விடுவோம் நாமளும் ஒரு ஆன்லைன் விற்பனைக்கு சென்று விட்டால் தான் இதற்கு மாற்று வழி கிடைக்கும் என பல்வேறு வகையிலும் யோசனைகள் தோன்றியது. குறைவான துணி வந்தாலும் நான் தையல் கலையை தொடர்ந்து செய்வதால் நான் என்றும் ஆக்டிவாக இருப்பதாக உணருவேன்.


அதேபோல் நிறைய பேர் துணியை தைக்க கொடுத்து விட்டு  துணியை வாங்கவே வர மாட்டார்கள். இரண்டு புது  துணிகள் தைக்க கொடுத்த இடத்தில் ஒன்றை மட்டும் வாங்கி செல்வார்கள். அது மட்டுமில்லாமல் சில சமயங்களில் தைத்த துணிகளை வாங்கிக்கொண்டு காசு கொடுக்காமல் விட்டு விடுவார்கள். ‌இப்படி தையல் தொழிலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவுகிறது. என்னை எல்லோரும் சாதனைப் பெண் என கூறுவார்கள். தையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நான் இந்த பீல்டுக்கு வந்ததில்லை. திருமணம் ஆன பிறகு 2002ல் தான் நான் தையல் தொழிலே கற்றுக்கொண்டேன். என் வாழ்வில் பல்வேறு இடையூறுகளை தகர்த்தெறிந்து நான் சாதித்தேன். இந்தத் தொழில் என் வாழ்க்கை முறையயே மாற்றி விட்டது. என் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தேன். 


அப்போது உள்ள காலகட்டத்தில் நான் புதுமைப்பெண் என  நினைத்த காலம் போய்  தற்போது நல்ல வேலையாக நான் செட்டில் ஆகிவிட்டேன். நான் சாதித்து விட்டேன். அப்படிதான் தோன்றுகிறது என்று கூறினார் பி. கெளரி.


கெளரி கூறுவது உண்மைதான்.. டெய்லரிங் என்ற பாரம்பரியம் இப்போது வேறு முகமாக மாறி விட்டது. இதனால் ஒரு தரப்புக்கு புதிதாக வேலை கிடைத்தாலும் கூட, ஏற்கனவே இதைப் பார்த்து வந்து பலர் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். ஆன்லைன் ஷாப்பிங், ரெடிமேட் என மக்கள் வெளியே சென்று கஷ்டப்படாமல் வீட்டிலேயே சொகுசாக ஆர்டர் செய்து வாங்குவதால் சிறு அளவில் டெய்லரிங் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ  சிறு தொழில் செய்து வரும் தொழிலாளர்களும் நலிந்து வருகின்றனர். அவர்கள் தொழில்  மட்டும் சரிவடையாமல் வாழ்க்கையிலும் சரிந்து விடுகின்றனர். இவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் நிலைமை என்ன ஆகும்.. இவர்களைப் போன்ற டெய்லர்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்தால் மட்டுமே இந்த பாரம்பரிய டெய்லர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்பது உண்மை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்