சினிமாவில் தொடரும் விவாகரத்துகள்.. சாமானியர்களை விட சகிப்புத் தன்மை குறைந்தவர்களாகி விட்டார்களா?
சென்னை : சினிமா துறையை சேர்த்த பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து தங்களின் வாழ்க்கை துணையை பிரிய போவதாக விவாகரத்து அறிவிப்புக்களை வெளியிட்டு வருவது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சினிமா துறையில் காதல் திருமணம் செய்து கொள்வதும், சில காலங்களில் விவாகரத்தை அறிவித்து பிரிவதும் ஒன்றும் புதியது கிடையாது. காலம் காலமாக இருந்து நடந்து வருவது தான். ஆனால் நடிப்பு துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இசைத்துறையைச் சேர்ந்தவர்களும் தற்போது அதிக அளவில் விவாகரத்துக்களை அறிவித்து வருவது தான் அனைவரின் அதிர்ச்சியும்.
தனுஷ், ஜெயம் ரவி என புகழின் உச்சியில் உள்ள நடிகர்கள் ஒருபுறம் விவாகரத்தை அறிவித்து, அவர்களின் விவாகரத்து வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது. மற்றொரு புறம் டி.இமான், ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகிய இசையமைப்பாளர்களும் அடுத்தடுத்து விவாகரத்து செய்தனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு தம்பதி.
இவர்களுக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகி விட்டது. இவர்களின் மூத்த மகளுக்கு திருமணமும் ஆகி விட்டது. இந்த நிலையில் தற்போது இவர்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி நடிகைகள் அமலா பால், சோனியா அகர்வால், சமந்தா என இதுவரை விவாகரத்தை அறிவித்த பிரபலங்கள் அனைவருமே தங்களுக்கிடையே இடைவெளி ஏற்பட்டு விட்டதால் பிரிவதாக தான் கூறி உள்ளனர்.
பொதுவாக விவாகரத்து என்றால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இனி மேல் இவருடன் இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில், சண்டை, சச்சரவுகள் அதிகமாக வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் ஆகிய அனைத்தும் பறிபோகும் நிலையில் தான் பிரிவதாக முடிவு எடுத்து, விவாகரத்து வரை செல்கிறார்கள். துணையிடம் ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில் இனி இவர்களை திருத்தவே முடியாது, இவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் வாழ்க்கை பாழாகி விடும் என்ற நிலையில் தான் விவாகரத்து முடிவை எடுப்பார்கள். ஆனால் பிரபலங்களின் வாழ்க்கையில் அப்படி இல்லை.
கருத்து வேறுபாடு, மனக்கசப்பு என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தவில்லை. இடைவெளி காரணமாக, இருவரும் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்தோம். இனி எப்போதும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று தான் பலரும் தங்களின் அறிக்கையில் விவாகரத்திற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.
வாழ்க்கை முறை, தொழில், பணம், புகழ் சம்பாதிப்பதற்கான ஓட்டத்தில் குடும்பத்துடன், மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது குறைவதால் இவர்களுக்குள் இடைவெளி என்பது ஏற்பட்டு விடுகிறது. இருவருமே சினிமா துறையை சேர்ந்தவர்களாக இருக்கும் போது ஆளுக்கு ஒரு புறம் வேலையில் மும்முரமாக இருப்பதாலும், ஒருவர் மட்டும் சினிமா துறையில் இருக்கும் பட்சத்தில் அவரது துணை தனிமையை அதிகம் உணர்வதாலும் இந்த இடைவெளி ஏற்படுவது சகஜமாகி விடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பிரபலங்களோ, சாமானிய குடும்பத்தினரோ வாழ்க்கை துணையுடன் தினமும் கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். தங்களின் அன்பு பிணைப்பை உடையாமல் பார்த்து கொள்வதில், உறவை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மனம் விட்டு பேசி, ஒருவருக்கு ஏற்படும் பயங்கள், குழப்பங்களை உடனடியாக பேசி தீர்வு கண்டு விட்டால் இது போன்ற இடைவெளிகள் வருவது தவிர்க்கப்படும். சின்ன சின்ன பரிசுகள், அடிக்கடி குடும்பத்துடன் வெளியில் செல்வது, வீட்டில் குழந்தைகளுடன் விளையாடுவது, பேசுவது ஆகியவற்றிற்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒருவேளை உணவாவது அனைவரும் சேர்ந்து உண்ணும் வகையில் பார்த்துக் கொண்டால் இது போன்ற விவாகரத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சாமானிய மக்கள் விவாகரத்து முடிவை ரொம்பவே யோசித்துதான் எடுக்கிறார்கள். அதுவும் அதீதமாக பிரச்சினை உருவாகும்போதுதான் பிரிய முடிவெடுக்கிறார்கள். அதுவரை சகித்துக் கொண்டு வாழ்வோர்தான் பலரும். ஆனால் பிரபலங்களிடையே அப்படி எதுவுமே இல்லை. மனதில் தோன்றியதுமே முடிவெடுத்து விடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஒரு வேளை சாமானியர்களை விட, பிரபலங்களிடம் சகிப்புத் தன்மை குறைந்து விட்டதோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்