கானல் நீரைத் தேடி அலைகிறோம்... !
Sep 01, 2023,03:13 PM IST
- தேவி
சென்னை: இயற்கையாகவே மனிதனுள் காதல் உணர்வு ஆழ் மனதில் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அறிந்து வெளிப்படுத்துவர்களின் வாழ்க்கை இனிமையாகவும், அதை மறந்து இயந்திரமாக வாழ்பவர்களின் நிலைமை இனிமை குறைந்ததாகவும் இருக்கின்றது. காதல் குறைவதால் உறவுகளிலும் இறுக்கம் குறைகிறது.. பிடிமானம் தளர்கிறது.. பிரிந்து போகும் எண்ணமும் அதிகரிக்கிறது.
அன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியிடையே விவாகரத்து என்பது தொலைவில் இருக்கும் "மரத்தின் நுனி "போன்று இருந்தது. மனைவியின் செல்ல திட்டலை வாங்கிக் கொண்டு, கணவனின் கண்களில் மறைந்து பார்க்கும் நாணங்களை ரசித்துக் கொண்டும் தங்களுடைய குழந்தைகளின் மழலை பேச்சுக்களை பார்த்துக் மகிழ்ந்தும், அதைத் தாண்டிய பிரச்சினைகளை சகித்துக் கொண்டும் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஆனால் இன்றோ விவாகரத்து என்பது மார்க்கெட்டில் கிடைக்கும் தக்காளி, வெங்காயம் போல் உடனே கிடைத்து விடுகிறது. முன்பு போல சகிப்புத்தன்மை இப்போது அதிகம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பல காரணங்கள் நம் கண் முன்பு விரிகின்றன. பெண்களுக்கு பொருளாதார சுந்திரம் இருக்கிறது.. தனித்து செயல்படக் கூடிய அளவுக்கு அவர்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொண்டுள்னளர். இது ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
பல நேரங்களில், கணவன் மனைவி இடையே காதல் உணர்வை விட மோதல் தான் அதிகமாக வளர்கிறது. நீயா நானா போன்ற வாக்குவாதமும், நீ செய்யலாம், நான் செய்யக்கூடாதா என்பது போன்ற மோதல்களும் அதிகம் உருவாகின்றன. ஒரு அளவுக்கு மேல் யாரும் இப்போது பொறுமை காப்பதில்லை. தனித்தனியே வாழலாம் என்ற யோசனைக்குள் சட்டென போய் விடுகிறார்கள்.
புரிதல் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.. இருவருக்கும் இடையே கருத்து மோதலோ அல்லது தேவையற்ற விஷயங்களுக்காக விவாதமோ ஏற்படுமானால் அங்கே விரிசல் விழ ஆரம்பிக்கிறது என்று பொருள். உடனடியாக அதன் மூலத்தை கண்டறிந்து அதை சரி செய்ய முயற்சிப்பதே புத்திசாலித்தனம். அப்படிச் செய்யாமல் விடுவதால்தான் பல உறவுகளில் கசப்புணர்வு அதிகரித்து பிரிவு வரை வேகமாக போய் விடுகிறார்கள்.
"கனவுகளை கண்ணில் சுமந்து
உணர்வுகளை மனதில் சுமந்து
உன்னிடம் உள்ள நிறைகளை என்னில் நிறைத்து
என்னிடம் உள்ள குறைகளை மற்றவர்களிடம் மறைத்து
கனவிலும் என் அருகில் இருக்க விரும்புகிறேன்"
இப்படித்தான் இருக்க வேண்டும் ஒவ்வொரு உறவும். ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்களின் உணர்வு என்பது ஒன்றுதான், தன்னை அடித்தால் வலிக்கும் என்று யோசிக்கும் ஒரு ஆணின் மனது, அவளுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று உணர வேண்டும். சுய கௌரவம் என்பது இருவருக்குமே பொதுவானது என்பதை கணவனும் உணர்ந்து மனைவியை மற்றவர்களிடம் மட்டம் தட்ட கூடாது. மனைவி என்பவள் தனக்காக மட்டும் வாழ்பவள் என்று தன்னுடைய எண்ணங்களை அவளிடம் திணிக்காமல் இருப்பதே மிகவும் சிறந்தது.
கணவனின் மனதை புரிந்து நடந்து கொள்ளும் மனைவி கிடைப்பது எல்லாம் அவரவர் செய்த பாக்கியம் என்பார்கள். அதேபோல் கணவனும் மனைவியின் கனவுகளை புரிந்து அவருக்கு துணையாக அவரது வாழ்க்கையை மேற்படுத்த உதவியாக இருக்க வேண்டும். இருவரும் அவரவர் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு எல்லாவற்றிலும் இணைந்து பயணிக்க வேண்டும்.. பிரச்சினைகள் வந்தால் உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. குடும்ப பிரச்சனையை மற்றவர்களிடம் திரையிட்டு காட்டாமலும் இருவருமே பேசி முடிவுக்கு வர வேண்டும்.
நாளை என்பது வெறும் கனவு மட்டுமே, இன்று மட்டுமே நிஜம் என்பதை உணர்ந்து நம்மை சுற்றியுள்ளவர்களிடம் முடிந்த வரை அன்பாகவும் ஆதரவாகவும் வாழலாம். பணத்தை வைத்து அனைத்தையும் வாங்கலாம் என்பது எல்லாம் பேச்சுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் அது உண்மை அல்ல. பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஓடாமல், வாழ்க்கைக்கு பணம் தேவை அவ்வளவுதான் என்று உணரந்து வாழ வேண்டும்.