லியோ ரிலீஸ்.. டிக்கெட் கட்டணத்தில் விதி மீறலா.. புகார் கூற நம்பர்கள் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Oct 17, 2023,09:40 AM IST

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ பட வெளியீட்டின்போது நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளனர்.


லியோ படத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடையே வரலாறு காணாத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு படம் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளன.




அரசுத் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.  19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசிக் காட்சி முடிய வேண்டும். அரசு அறிவித்த டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பார்க்கிங் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


விதி மீறல்கள் இருந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அதிகாரிகள் இப்போதே நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.


ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவித்து வருகின்றனர். புகார்கள் இருந்தால் இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தரலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கோட்டம் வாரியாக தொலைபேசி எண்களை ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.