டாக்டர் பட்டாளத்தோடு வந்த அமைச்சர் மா.சு.. நிம்மதிப் பெருமூச்சு விட்ட இயக்குநர் விக்ரமன்!

Meenakshi
Oct 30, 2023,04:40 PM IST

சென்னை:  இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியாவின் உடல் நலம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளையும், உதவிகளையும் செய்யுமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதையடுத்து  அமைச்சர் மா.சுப்பிரமணியன், விக்ரமன் இல்லத்துக்குச் சென்று நடந்ததைக் கேட்டறிந்தார்.

ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்தது குறித்து விசாரித்தார். அவருடன் மருத்துவர்களும் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து இயக்குநர் விக்ரமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:




வணக்கம் நான் திரைப்பட இயக்குனர் விக்ரமன் பேசுகிறேன். என் மனைவிக்கு 5 வருசமா உடம்பு சரியில்ல படுத்த படுக்கையா இருக்காங்க. நான் ஒரு வெப்சைட்டுக்கு பேட்டி கொடுத்தப்ப முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஐயா நீங்க தலையிட்டு என் மனைவிக்கு நல்ல டீரட்மெண்ட் கொடுக்கனும்னு கேட்டு இருந்தேன். 


அதை பார்த்து முதல்வர், அமைச்சர்ட்ட நீங்க போய் பார்த்து விசாரிங்கன்னு சொல்லி இருந்தாரு. அமைச்சர் ஐயாவும்  ஒரு டாக்டர் பட்டாளத்தையே கூட்டிட்டு வந்திருந்தார். அமைச்சரோட 25 மேற்பட்ட டாக்டர்கள் வந்திருந்தாங்க. வந்தவங்க என் ஒய்ப்ப நல்லா செக் பண்ணி பார்த்தாங்க. பெஸ்ட் டிட்மெண்ட் தர்றோம். சிக்கிரம் குணமாக்கி தர்றோம்னு சொன்னாங்க என்று தெரிவித்தார்.




தமிழ் சினிமா உலகில்  90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். இவர்,   

மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். முதன் முதலில் 1990ம் ஆண்டு  புது வசந்தம் என்ற படம் மூலம் இயக்குனராக ஆவதாரம் எடுத்தார். விஜய்யின் பூவே உனக்காக, உன்னை நினைத்து, வானத்தைப் போல, சூரிய வம்சம் உள்ளிட்ட பல  மெகா ஹிட் படங்களை இயக்கியவர்.


இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா. பிரபலமான குச்சுப்புடி  நடனக் கலைஞராக வலம் வந்தவர். சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் நடனம் ஆடியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முதுகு வலி பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதுகில் செய்த தவறான அறுவைச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையிலேயே கால்களைக் கூட அசைக்க முடியாமல் உணர்வுகள் அற்ற நிலையில் இருந்துள்ளார். 




இதனால் மனைவியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயக்குனர் விக்ரமன் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்கிற படத்தை இயக்கியதுடன் அடுத்து எந்த படமும் இயக்கவில்லை. தன்னுடைய சொத்தை விற்று தான் மனைவிக்கு சிகிச்சை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில், விக்ரமன் மற்றும் அவரது மனைவி இருவரும் கூட்டாக ஒரு சானலுக்கு பேட்டியளித்தனர். அப்போது தனது மனைவியின் நிலை குறித்து விளக்கியிருந்தார் விக்ரமன், மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் உதவி கோரியிருந்தார்.


இந்த வீடியோவை பார்த்த பிறகே முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறி நேரில் சென்று பார்க்க உத்தரவிட்டார். இதையடுத்து இயக்குனர் விக்ரமனின் வீட்டுக்கு வந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் விக்ரமனின் மனைவியை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.