எனக்கு 2 மகள்கள் உள்ளனர்.. நடிகைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும்.. இயக்குநர் வெங்கட் பிரபு

Su.tha Arivalagan
Sep 03, 2024,01:24 PM IST

சென்னை: எனக்கும் 2 மகள்கள் உள்ளனர். தமிழ்த் திரையுலகில் பணியாற்றும் அனைத்துப் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கண்டிப்பாக தேவை என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.


திரையுலகில் நிலவும் பாலியல் சுரண்டல்கள் குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மலையாளத் திரையுலக பிரச்சினைகள் வெடித்துக் கிளம்பிய நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு என்று பிற திரையுலகினரும் இதுகுறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.


இந்த நிலையில் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு இதுதொடர்பாக என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:




தமிழ்த் திரையுலகிலும் இதுபோன்ற புகார்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இப்போதாவது பிரச்சினைகளை சரி செய்ய முயல வேண்டும்.


பெண்கள் திரையுலகில் மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் சரி, பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். எனக்கும்  2 மகள்கள் உள்ளனர். எனவே பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது, முதன்மையானது.  தவறு செய்தவர்கள் மீண்டும் அந்தத் தண்டனையை நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.


விசாரணையை விட தண்டனைதான் இங்கு முக்கியமானது. அப்போதுதான் மற்றவர்கள் பயப்படுவார்கள். குறிப்பாக வன்ம மனம் கொண்டவர்கள் திருந்த வாய்ப்பு கிடைக்கும். அனைத்துத் துறைகளிலுமே இன்று பாலியல் சுரண்டல்கள் இருக்கின்றன. மீடியா வெளிச்சத்திற்குள்ளாவதால் திரைத்துறையில் எது நடந்தாலும் அது பெரிதாக்கப்படுகிறது.  அதேசமயம், மீடியா, ஐடி, விளையாட்டு என எல்லாத் துறைகளிலுமே பாலியல் சுரண்டல்கள் இருக்கத்தான் செய்கின்றன.


சின்மயி விவகாரம்:


பாடகி சின்மயி விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். அதை திரையுலகம் பார்த்துக் கொள்ளும். ஆனால் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.


ஆனால் வெங்கட் பிரபுவின் இந்தக் கருத்து குறித்து சின்மயி பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், வெங்கட் பிரபுவை தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக எனக்குத் தெரியும். ஆனால் தமிழ்த் திரையுலகம் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருப்பது தவறு, அதை நான் மறுக்கிறேன்.  உண்மையில் ஃபெப்சி எதுவுமே செய்யவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு அறிக்கை கூட அது விடுக்கவில்லை என்று கூறியுள்ளார் சின்மயி.


சின்மயி  விவகாரம் தொடர்பாக நடிகை ராதிகாவும் கூட தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். சின்மயிக்கு பிரச்சினை வந்தபோது எந்த ஆண்களும் துணை நிற்கவில்லை. அவரைத்தான் பழி சுமத்தினார்களே தவிர அவருக்கு துணையாக எந்த முன்னணி நடிகரும் நிற்கவில்லை. திரையுலகம் அவரை ஒதுக்கியது. அவரது திறமை வீணானாது. அவரது வாய்ப்புகள் பறிக்கப்பட்டனவே தவிர அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார் ராதிகா.


பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது சின்மயி வைத்த குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை வைரமுத்து மறுத்துள்ளார். இந்த விவகாரம் இன்னும் முடிவு தெரியாமல் நீண்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்