சீமான் கருத்துக்களை கருத்துக்களால்தான் எதிர்கொள்ள வேண்டும்.. அச்சுறுத்தக் கூடாது.. இயக்குநர் கெளதமன்
சென்னை: கருத்தை கருத்தால் மட்டும் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அச்சுறுத்தல்களால் அடக்க நினைப்பது நேர்மையற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகை சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான வ. கௌதமன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக பேசியிருந்தார்.இந்த சீமானின் பேச்சு கண்டனத்திற்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சீமானின் வீட்டு முன்பு வரும் 22 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று பெரியார் திக, திவிக அமைப்பினர் மற்றும் மே 17 இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து அப்பகுதியில் திரண்டனர். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் சீமானின் வீட்டு முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான வ. கௌதமன், சீமான் வீட்டை முற்றுகையிட்டது கண்டிக்கத்தக்கது என சீமானுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அடக்குமுறையாளும் அச்சுறுத்தல்களாலும் அடக்க நினைப்பது நேர்மையற்றது என்பதனை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்களுக்கும் அவர்கள் முற்றுகையிட மறைமுக அனுமதி தந்த தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் அவர்கள் உயிரோடு இருந்து அவரை கொண்டாடிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை மிகக் கடுமையாக விமர்சித்த போதும் அதனை புன்முறுவலோடு எதிர்கொண்ட வரலாற்றினை இங்கு பலரும் அறிந்திருப்பர். திராவிடக் கழகத்தின் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்களின் இளமைக்காலம் தொட்டு அவரது உயிர் நண்பர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பதின்ம பருவ இளைஞனாக இருக்கும் போது பெரியார் அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடையில் ஏறி ஒலிபெருக்கியினை வாங்கி மிகக் கடுமையாகவும் ஆத்திரமாகவும் பெரியாரை விமர்சிக்க, கூட்டத்திலிருந்த பெரியாரின் தொண்டர்கள் கத்திக் கூச்சலிட்டு அவரை கீழிறங்கச் சொல்ல, பெரியார் தனது தொண்டர்களை அமைதிப்படுத்தி ஜெயகாந்தன் அவர்களை மேற்கொண்டு பேச சொல்கிறார்.
ஆத்திரம் தீர பேசி முடித்துவிட்டு கீழிறங்கப் போன ஜெயகாந்தனை அருகில் அழைத்து, அவரின் பெயர் கேட்டு முதுகில் தட்டிக் கொடுத்து அனுப்பினாராம் பெரியார். அப்படிப்பட்ட பெரியாரின் தொண்டர்கள் இன்று சீமான் அவர்களின் வீட்டினை முற்றுகையிட்டதோடு அவரது படங்களில் செருப்பு கொண்டு அடித்து அவமானப்படுத்துவதென்பது அநாகரிகமானது மட்டுமல்ல, அருவருப்பானதும் கூட. தவிரவும் அவரின் மனைவி பிள்ளைகள் வாழும் வீட்டை முற்றுகையிட தமிழ்நாடு அரசு மறைமுக அனுமதி கொடுத்ததென்பது ஒரு அறமற்ற செயல்.
இந்த முன் தொடக்கம் என்பது இரண்டு பக்கமும் கூர்முனை கொண்ட பேராயுதத்திற்கு சமமானது. இதனையே முன் உதாரணமாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் தமிழ்நாட்டின் தலைவர்கள் அல்லது ஆட்சியாளர்களின் இல்லங்களை முற்றுகையிட்டால் சட்டம் ஒழுங்கு என்னாகும் என்பதை தமிழ்நாடு காவல்துறை இனியாவது சிந்திக்க வேண்டும்.
நாட்டில் பிறந்து வாழ்ந்து போராடிய ஒவ்வொரு தலைவர்களையும் போற்றுவது போலவே எதிர்வரும் தலைமுறை அவர்களை விமர்சிப்பதற்கும் உரிமை உண்டு. திரு.சீமான் பேசியது தவறென்றால் சட்டத்தை நாடுங்கள். இல்லையேல் சனநாயக வழியில் போராடுங்கள். அதனை தவிர்த்து தமிழ்நாட்டில் அதுவும் ஒரு தமிழன் வீட்டை முற்றுகையிட அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழர்கள் என்கிற போர்வையில் எங்கள் இனத்திற்கும் மொழிக்கும் எதிராக நிற்கும் மறைமுக கூட்டங்களாக இருந்தாலும் சரி இது போன்ற நேர்மையற்ற செயல்பாடுகளை அறங்கேற்ற நினைத்தால் அவை அத்தனையையும் சகித்துக்கொண்டு தொடர்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்