இந்த சீனெல்லாம் செல்லாது.. செய்ய வேண்டியது இதுதான்.. ஞானவேல்ராஜாவுக்கு சமுத்திரக்கனி "ஆர்டர்"!

Su.tha Arivalagan
Nov 30, 2023,01:50 PM IST

சென்னை: பருத்தி வீரன் விவகாரம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த "விளக்க"க் கடிதத்துக்கு ஏற்கனவே இயக்குநர் சசிக்குமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இயக்குநர் சமுத்திரக்கனியும் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார்.


பருத்தி வீரன் இயக்குநர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா ஒரு யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. அமீர் குறித்துஞானவேல்ராஜா பயன்படுத்திய வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 


அவரது பேச்சுக்கு இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் கண்டநம் தெரிவித்தனர். கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்ததைத் தொடர்ந்து விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டார் ஞானவேல்ராஜா. அதில் இயக்குநர் அமீர் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறியதால்தான் தான் அவ்வாறு பேச நேரிட்டதாக கூறியிருந்தார் ஞானவேல்ராஜா. மேலும் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.




ஆனால் இதுவும் தற்போது கடும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. பெயரே குறிப்பிடாத இந்த வருத்தம் யாருக்காக.. அமீர் என்ன பொய்யான குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். ஞானவேல்ராஜா அதை பகிரங்கமாக விளக்க வேண்டும் என்று சசிக்குமார் நேற்று கடுமையாக கேட்டிருந்தார்.


இந்த நிலையில் தற்போது இயக்குநர் சமுத்திரக்கனியும் ஞானவேல்ராஜாவுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீன் எல்லாம் இங்கே செல்லாது. நீங்க செய்ய வேண்டியது.. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ அதே பொதுவெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து தொடச்சு தூர எறியனும்.


அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்கின நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பளம் பாக்கி இருக்கு.. பாவம் அவங்க எல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க.. நீங்கதான் "அம்பானி ஃபேமிலி "ஆச்சே.. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்று கூறியுள்ளார் சமுத்திரக்கனி.


அடுத்து கரு பழனியப்பன் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. அதேபோல இயக்குநர் பாரதிராஜா மீண்டும் அறிக்கை விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க விரைவான உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தயாரிப்பாளர் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் இப்போதாவது தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க முயலுமா அல்லது.. "பாயின்ட் வரட்டும்" என்று காதைக் குடைந்தபடி காத்திருப்பார்களா என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.