"நான் போட்டியிடப் போறேன்".. வழக்கம் போல "குப்பாச்சு குழப்பாச்சு" டிவீட் போட்ட ராம் கோபால் வர்மா

Aadmika
Mar 15, 2024,10:45 AM IST

டில்லி : ஆபாச சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் சினிமா டைரக்டர் ராம் கோபால் வர்மா, திடீரென அரசியலில் குதிக்க உள்ளதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து பரப்பை ஏற்படுத்தி விட்டார்.. கடைசியில் அது புஸ்வாணமாகி விட்டது.


நேற்று ராம் கோபால் வர்மா ஒரு டிவீட் போட்டார்.. அதில், "திடீர் முடிவு.. நான் பீதாப்புரத்திலிருந்து போட்யிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன் என்ற சந்தோஷமான முடிவை தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார் ராம் கோபால் வர்மா. இதனால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. 


ஆந்திராவில் தற்போது அதிரடியாக கூட்டணிகள் உறுதியாகி, தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ராம் கோபால் வர்மாவின் இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியது.  தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவற்றின் கூட்டணி முடிவானதாக அறிவிக்கப்பட்ட உடனேயே ராம் கோபால் வர்மா இந்த முடிவை அறிவித்ததால் மேலும் பரபரப்பு கூடியது. 




காரணம், ஜன சேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாணம் பீதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே ராம் கோபால் எந்தக் கட்சி சார்பில் போட்டியிடப் போகிறாார் என்ற பரபரப்பு கூடியது.


கடந்த ஆண்டு ஆந்திர அரசியலை மையமாக வைத்து வியூஹம் என்ற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார். இது ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மரணம் நடந்த சூழ்நிலையை பற்றிய படம். இந்த படமும் பல சர்ச்சைகளை கிளப்பியது. பல உள்ளூர் தலைவர்கள், அந்த படத்தின் தயாரிப்பாளரை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 


அந்த சமயத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரா லோகேஷ், பவன் கல்யாண் ஆகியோரை மிக கடுமையாக தாக்கி பேசி இருந்தார் ராம் கோபால் வர்மா. இந்நிலையில் அவர் போட்ட டிவீட், பவன் கல்யாணுடன் நேரடியாக மோதும் நிலையை ஏற்படுத்தியதால் பரபரப்பு எகிறியது.


ஆனால் வழக்கம் போல சொதப்பி விட்டார் ராம் கோபால் வர்மா. ஆமாங்க ஆமா.. அது தேர்தல் போட்டியில்லையாம்.. அதுகுறித்து அவரே இன்னொரு டிவீட் போட்டுள்ளார்.. அதில், எனது டிவீட்டைப் படித்து தப்பாகப் புரிந்து கொண்ட அனைவருக்கும் கூறிக் கொள்கிறேன், நான் குறும்பட போட்டியில்தான் கலந்து கொள்ளப் போகிறேன். அந்த குறும்படத்தை பீதாப்புரத்தில் ஷூட்செய்தேன். அதைத்தான் எனது டிவீட்டில் சொல்லியிரு்நதேன். எனது தகவல் சரியாகப் போகவில்லை என்று கருதுகிறேன்.. அதற்காக வருத்தப்படுகிறேன்.. ஸாரி.. நான் தேர்தல் என்று கூட சொல்லலை.. அதுக்குள்ள இந்த மீடியாக்காரங்க அவசரப்பட்டுட்டாங்க என்று விளக்கம் கொடுத்துள்ளார் வர்மா.


ஏண்ணா.. உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா!