"ஜப்பான்".. இதுதான் கார்த்திக்கு ஏற்ற சரியான படம்.. இயக்குனர் ராஜூ முருகன் புகழாரம்!

Su.tha Arivalagan
Nov 07, 2023,03:00 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: ஜப்பான் கார்த்திக்கு ஏற்ற சரியான திரைப்படம். நான் எடுத்த படங்களிலேயே இது முழுக்க முழுக்க வித்தியாசமானது என இயக்குனர் ராஜு முருகன்  கூறியுள்ளார்.


நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இது கார்த்தியின் 25வது படம். இப்படத்தை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி உள்ளார். 


ஜப்பான் திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது. இதில் அனு இமானுவேல், இயக்குனர் மில்டன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.




காத்திருக்கும் கார்த்தி ரசிகர்கள்


இந்தப் படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன் கூறுகையில், ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்து என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதி என்பதுபோல இப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது என்றார்.


இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்றதுடன் கார்த்தியின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் எப்போது இப்படத்தை பார்ப்போம் என கார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 


வித்தியாசமான படம் ஜப்பான்


படம் குறித்து ராஜு முருகன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:


ஜப்பான் திரைப்படம் கண்டிப்பாக  இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி  நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. 




முதலில் இந்த ஜப்பான் கதாபாத்திரம் அவருக்கான சரியான கதாபாத்திரமாக திரைக்கதையில் அமைந்துவிட்டது. திரைக்கதையைப் படித்தவுடன் இந்த இந்த இடங்களில் இந்த கதாபாத்திரம் என்னை ஈர்த்துவிட்டது என்று கார்த்தி சொன்னார். அப்போதே அவர் இந்தக் கதைக்குள் வந்துவிட்டார். தொடர்ந்து இந்தக் கதாபாத்திரத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி பல உரையாடல்கள் எங்களுக்குள் இருந்தன. 


ஜனரஞ்சகமான குடும்பப் படம்


அவருக்கும் பல பார்வைகள் உள்ளன. ஒரு நாயகன், நடிகர் என்பதைத் தாண்டி அவர் அடிப்படையில் முதலில் உதவி இயக்குநராக இருந்தவர் இல்லையா. எனவே அடிப்படையில் அவருக்கு திரைக்கதை பற்றிய புரிதல் அதிகம். அது எனக்கும் உதவியாக இருந்தது. அப்படி அந்தக் கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாகக் கொண்டு சென்றோம். இது முழுக்க முழுக்க ஜப்பான் என்கிற கதாபாத்திரத்தை ஒட்டிய படம். 


அதில் ஜனரஞ்சக ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு, குடும்பமாக வரும் ரசிகர்களுக்கான அம்சங்கள் என எல்லாமே இருக்கும். அதே நேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அதை என்றுமே நான் தவற விட முடியாது. அந்த அம்சங்கள் வேண்டும் என கார்த்தியும் தீவிரமாக இருந்தார். எனவே இது கார்த்தி - ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம். எங்களின் கூட்டு முயற்சி என்று கூட சொல்லலாம்.


நம்பிக்கையை காப்பாற்றுவேன்




இப்படி அமைவது எனக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனென்றால் இது கார்த்தியின் 25வது படம். அதை இயக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறார். அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாகக் கண்டிப்பாக ஜப்பான் இருக்கும்.


சினிமாவுக்காக நாங்கள் கஷ்டப்பட்டோம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். கலை என்பது அனைவரும் உற்சாகமாக, மகிழ்ச்சியுடன் பணியாற்றும் விஷயம். நாங்களும் அப்படித்தான் பணியாற்றியிருக்கிறோம். எனக்கு தனிப்பட்ட முறையில் இனிமையான அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் நிச்சயமாக அப்படி இருக்கும் என்று நினைக்கிறேன். கார்த்தியை பிடிக்கும் அனைவருக்கும் அவரை புதுவிதமான ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என இயக்குனர் ராஜு முருகன் பேசினார்.