"விஜயகாந்தை இப்படிப் பண்ணாதீங்க.. பார்க்கவே கஷ்டமா இருக்கு".. இயக்குனர் பாண்டிராஜ் குமுறல்!
- மஞ்சுளா தேவி
சென்னை: "கேப்டன்" விஜயகாந்தை இப்படியெல்லாம் காட்டாதீர்கள். பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என இயக்குனர் பாண்டிராஜ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. தேமுதிகவில் விஜயகாந்த் இதுவரை தலைவர் பதவியுடன் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்து வந்தவர். தற்போது இவர் உடல்நிலை நலிவுற்று இருப்பதால் அவரது பதவியை பிரேமலதாவுக்கு கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் பூரண குடைமடைந்தார் என அறிவித்திருந்த நிலையில் இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்து வீல்சேரில் அமர வைத்திருந்தனர். அவரைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது. உடல் மெலிந்து சரியாக உட்காரக் கூட முடியாமல் இருந்தார் விஜயகாந்த். அவரால் நிலையாக உட்கார முடியவில்லை. சாய்ந்து விழும் வேளையில் அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.
கம்பீரமான குரலில், மிடுக்கான நடையில் இருந்த கேப்டன் விஜயகாந்த்தை தற்போதைய நிலையில் பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதேசமயம், உடம்பு சரியில்லாத ஒருவரை இப்படியா கூட்டிக் கொண்டு வந்து கஷ்டப்படுத்துவது.. இது சித்திரவதைக்கு சமம் என்று பலரும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
அவரை இப்படி பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரலாமா.. உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இந்த அணுகுமுறை சரியா.. இது அவரை சிரமப்படுத்தாதா.. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமாகி வந்துள்ள ஒருவரை இப்படி பொது வெளியில் கூட்டி வருவது மருத்துவ ரீதியில் சரியான செயலா என்றும் பலர் கேட்கின்றனர்.
இதே கருத்தையே இயக்குனர் பாண்டிராஜும் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்.. பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு என மனவேதனையுடன் ட்விட் போட்டுள்ளார்.
அவரது கருத்தை ஆமோதித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.