இயக்குநர் மட்டுமல்ல.. இனிமேல் லோகேஷ் கனகராஜ்.. தயாரிப்பாளரும் கூட.. வந்தாச்சு "G Squad"
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
சினிமாத் துறையில் நீண்ட காலமாகவே ஒரு வழக்கம் உள்ளது. ஒருவர் ஒரு துறையில் மட்டும் சிறந்தவராக இருக்க மாட்டார்.. திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் காலூன்றி இருப்பார்கள். குறிப்பாக நடிப்பில் பெரிய பெயர் கிடைத்தவுடன் அவர்கள் இயக்குநராகவோ அல்லது படத் தயாரிப்பில் ஈடுபடவோ முயல்வார்கள்.
இது அந்தக் காலத்து சிவாஜி கணேசன் முதல் நேற்றைய கமல்ஹாசன் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை எல்லோருக்கும் அந்தப் பழக்கம் உள்ளது. இயக்குநர்கள் நடிப்பிலும் கால் வைப்பார்கள்.. தயாரிப்பிலும் கை வைப்பார்கள். இது சினிமாவில் சகஜமானது.
அந்த வகையில் இயக்குநராக வெற்றிக் கொடி நாட்டி விட்ட லோகேஷ் கனகராஜும் இப்போது தயாரிப்பாளராகியுள்ளார். ஜி ஸ்குவாட் என்ற புதிய பட நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளேன். இந்த நிலையில் புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இதன் மூலம் பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு நல்ல படங்களை கொடுக்க முடிவு செய்துள்ளேன். முதல் கட்டமாக எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் படங்களை தயாரிக்க உள்ளேன். எனக்கு கொடுத்த அதே ஆதரவையும் அன்பையும் அவர்களுக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவரின் ஆசியையும் வேண்டி நிற்கிறேன்.
எங்களது நிறுவனம் தயாரிக்கப் போகும் புதிய படங்கள் குறித்து அறிவிப்புக்காக அனைவரும் அமைதியாக காத்திருங்கள் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ்கராஜ் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். மாநகரப் படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் கடைசியாக லியோ படத்தை அவர் இயக்கியுள்ளார். யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் தனித்து இயக்குனராக உருவெடுத்து இன்று தமிழ் திரை உலகின் மிகப்பெரிய ஒரு இயக்குனராக வளர்ந்து நிற்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அவர் இயக்கிய 5 படங்களும் ஐந்து விதமான உணர்வுகளை ரசிகர்களுக்கு கொடுத்தது. இந்த நிலையில் தயாரிப்பாளராக அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது கதைகள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்ததோ, அதேபோல தயாரிப்புகளும் இருக்குமா என்பது போகப் போகத் தெரியும்.
நல்ல நல்ல படங்களாக தயாரிக்க லோகேஷ் கனகராஜை வாழ்த்துவோம்