"ஆயிரம் பொற்காசுகள்".. இயக்குநர் கேயார் போட்ட பலே புரமோஷன் ஐடியா.. என்னா தெரியுமா?

Meenakshi
Dec 01, 2023,04:02 PM IST

சென்னை:  இயக்குநர் கேயார் வழங்கும் ஜி ஆர் எம் ஸ்டுடியோ தயாரிப்பில் ரவி முருகையா இயக்கத்தில் 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படம் தாயாராகி உள்ளது. இப்படத்தை பார்க்க வருபவர்களுக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று கேயார் புதிய புரமோஷன் உத்தியை அறிவித்துள்ளார்.


இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்  கேயார். சினிமா துறையில் பல புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருபவர் இவர். இந்த வரிசையில், கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்தை புதுமையான முறையில் வெளியிட கேயார் தயாராகி வருகிறார்.


ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி மூலமாக இப்படம் வருகிற 22ம் தேதி தமிழகம் எங்கும் திரையிடப் பட உள்ளது. விதார்த், சரவணன், ஜார்ஜ் மரியான், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பவுன்ராஜ், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம், ஜிந்தா மற்றும் ராஜா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  கலகலப்பான நகைச்சுவை திரைப்படமான ஆயிரம் பொற்காசுகள் படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கேயார் அறிவித்துள்ளார். இலவச டிக்கெட்டுக்கான கட்டணத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். 


இது குறித்து கேயார் பேசுகையில், "ஒரு படத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதே முதல் நாள் முதல் காட்சி தான். பெரிய படங்கள் வியாபார ரீதியில் வசூலை அள்ளும் நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள‌ன. ஒரே வாரத்தில் அதிகளவில் படங்கள் வெளியாவதும் இதற்கு ஒரு காரணம். சிறு பட்ஜெட் படங்களே எடுக்க வேண்டாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு இதுவல்ல. ஏதாவது செய்து பார்வையாளர்களை எப்படி திரையரங்குகளை வர வைப்பது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாகத் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்.




பெரிய படங்கள் வந்து மாபெரும் வெற்றி பெறுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று பெரிய இடத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறிய படங்களின் மூலம் தங்களது பயணத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறு பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை புதுமையான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் விளைவாக இந்த முடிவை எடுத்துள்ளேன்.


தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளதால் இந்த திட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் தங்களது மேலான ஆதரவை 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்திற்கு வழங்கி திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசித்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் :ஆயிரம் பொற்காசுகள்' உருவாகியுள்ளது," என்று தெரிவித்தார்.