பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

Baluchamy
Feb 03, 2023,01:48 PM IST
பிரபல மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் (92) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு இந்திய திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



1957ம் ஆண்டு சென்னையில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய கே.விஸ்வநாத், 1965ம் ஆண்டு 'ஆத்ம கவுரவம்' என்ற தெலுங்கு படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே திரையுலகினரை திரும்பிப் பார்க்கவைத்த விஸ்வநாத் தொடர்ந்து பல அற்புதமான படைப்புகளை கொடுத்தார்.

தெலுங்கில் 'சாகர சங்கமம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய விஸ்வநாத் தமிழில் நடிகர் கமலஹாசனை வைத்து 'சலங்கை ஒலி' படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி இயக்குநராக வலம் வந்தார். தனது வாழ்நாளில் மொத்தம் 50 திரைப்படங்களை இயக்கிய விஸ்வநாத், திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே வருத்தும், பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

படத்தை இயக்குவதில் ஆர்வம் கட்டிய விஸ்வநாத், நடிப்பிலும் அசத்தினார். யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் உட்பட ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 

இப்படியாக சினிமா துறையில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்துவந்த விஸ்வநாத், வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் தனது இல்லத்தில் நேற்று நள்ளிரவு காலமானார். இவரின் மறைவுக்கு இந்திய திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.