பத்து வருடமாகி விட்டது.. நந்தன் படம்தான் எனக்கு முதல் மேடை.. இயக்குநர் இரா சரவணன் நெகிழ்ச்சி!

Manjula Devi
Sep 14, 2024,02:43 PM IST

சென்னை: சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை. இதுதான் எனக்கு முதல் மேடை என நந்தன் படம் பட இசை வெளியீட்டு விழாவில்  இயக்குனர் இரா. சரவணன் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


ஈரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் டிடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் வெளியிடும் திரைப்படம் படம் நந்தன். இப்படத்தை உடன்பிறப்பை இயக்குனர் இரா சரவணன் இயக்கி உள்ளார் மேலும் மாறுபட்ட கதைக்களத்தில் மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கரைமிக்க படைப்பாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.




இப்படம் வரும் இருபதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் இப்படை இயக்குனர் ரா. சரவணன், பத்திரிகையாளர்கள், மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


அப்போது இப்படம் குறித்து இயக்குநர் இரா. சரவணன் பேசியதாவது:




சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை,  இதுதான் எனக்கு முதல் மேடை, முதல் இரண்டு படங்களுக்கும் சேர்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் பேச வேண்டிய விசயங்கள் எல்லாவற்றையும், எல்லோரும் பேசி விட்டார்கள். அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ,  அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்த திரைப்படத்தை பார்த்து, பாராட்டிய அன்றுதான், நாம் ஒரு நல்ல திரைப்படத்தை செய்திருக்கிறோம், என்ற நம்பிக்கை வந்தது. அண்ணனுக்கு என் நன்றிகள்.


ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி, பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும்,  பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணைக்கு கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம்.  அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும்.. பிசினஸுக்காக படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள்,  ஆனால் Trident Arts ரவீந்திரன் சார் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல்,  ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார்.  சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது,  இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார், சார் உங்கள் மனதுக்கு என் நன்றிகள். 


இந்த விசயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான்.  இந்த படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன், அவர்களை தேடித்தான் போனேன், ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார் சார், சரி நான் செய்கிறேன் வா என்று என்னை அழைத்து சொன்னார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. 


ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும், ஆனால் நான் அப்படி நடத்தவில்லை, இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு,  கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு  படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை பாடாய்படுத்தினேன். முழு மக்களின் கூட்டத்திற்கு நிறுத்தி அடி வாங்கவிட்டேன்.  முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன்.  


இந்த படத்தை நாங்கள் எடுத்தோம் என்றாலும், இந்த படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, இன்று இந்த மேடை வரை கொண்டு வந்தது, Think Music சந்தோஷ் அவர்கள் தான். அவர் எத்தனையோ பேருக்கு, நல்லது செய்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவர்தான் ஜிப்ரானையும் பரிந்துரைத்தார். நான் முதலில் இந்த படத்திற்கு இமான் அவர்களை அணுக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சந்தோஷ்.. ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் என்றார். அவர் எப்படியும் படம் பார்த்துவிட்டு முடியாது என்று தான் சொல்வார்  என்று நினைத்துதான் படத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் படத்தை பார்த்த உடனே போன் செய்து, இந்த படத்தை கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று சொல்லி, மிக அற்புதமான இசையை தந்துள்ளார். என் படத்தை நானே பார்த்து பிரமிக்கும் அளவு, ஒரு இசையை அவர் தந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். நண்பர் இயக்குநர் வினோத் இந்த படத்திற்கும், எனக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவர் இருக்கும் சூழலில் இங்கு என்னை வாழ்த்த வந்ததற்கு நன்றிகள்.


நடிகை ஸ்ருதிக்கு இது முதல் படம் என்றாலும், நான் எழுதிய கதாபாத்திரத்தை, அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த ஊர் மொழியை கூட அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.


படத்தின் இரண்டாவது கதாநாயகன் பாலாஜி சக்திவேல். அவரிடம் சொல்லும்போது சார் இந்த படத்தில் நீங்கள் தான் நாயகன் என்று தான் சொன்னேன், முதல் பாடலே அவருக்கு தான் வைத்திருக்கிறேன், எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும், சிரித்த முகத்துடன் நிதானமாக இருங்கள் எனும் ஒரு மிகச் சிறந்த பண்பை, அவரிடம் கற்றுக் கொண்டேன். 


இப்படத்தை நான் நினைத்தபடி எடுக்க உதவியாக இருந்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படத்துக்காக உழைத்து மறைந்து போன மூன்று பேரை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன்,  பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் என கூறியுள்ளார். 


இசையமைப்பாளர் ஜிப்ரான்:




நண்பர் சந்தோஷ் தான் முதலில் போன் செய்தார், பின் இயக்குனர் வினோத்தும் இந்த படத்தை பார்க்க பரிந்துரைத்தார். அப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன், இந்த படத்தை பார்த்தவுடனே, இயக்குனர் சரவணனுக்கு ஃபோன் செய்து, இந்த படத்தை கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்த படம் கண்டிப்பாக பெரிய ஒரு தளத்திற்கு செல்லும், அதில் நாமும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று தோன்றியது. 


கண்டிப்பாக இந்த படம் பேசும் அரசியல் முக்கியமானது, நான் இந்த படத்திற்குள் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமை, நான் எந்த உதவியும் செய்யவில்லை. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது, இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்