அப்படியே வந்து கட்டிப் பிடிச்சு கன்னத்துல முத்தம்.. உறைந்து போன பாலா.. உருகிப் போன மாரி செல்வராஜ்!

Su.tha Arivalagan
Aug 22, 2024,06:53 PM IST

சென்னை:   வாழை படத்தில் மாரி செல்வராஜ் ஏதோ பெரிய சம்பவம் செய்திருக்கிறார் போல.. பார்த்தவர்கள் எல்லாம் நெகிழ்கிறார்கள், அழுகிறார்கள், உருகுகிறார்கள்.. லேட்டஸ்டாக இயக்குநர் பாலாவையே  உறைந்து போக வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.


வழக்கமாக பாலாதான் படம் பார்ப்பவர்களை அழ வைப்பார், இறுகிப் போக வைப்பார். ஆனால் அப்படிப்பட்ட பாலாவே வாழை படத்தைப் பார்த்து விட்டு எதுவுமே பேச முடியாமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.


தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான கலைஞர்களைப் பிரசவித்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ். கூட்டத்தில் ஒருவர் என்று இவரை சொல்லி விட முடியாது, மாறாக, தனித்துவத்துடன், தனக்கென தனிக் களம் அமைத்து, தனது இயக்கம் இப்படித்தான் இருக்கும், இதைப் பற்றித்தான் நான் பேசுவேன் என்று துணிச்சலுடன் படம் எடுத்து வருபவர் மாரி செல்வராஜ்.




அவரது பரியேறும் பெருமாள், கர்ணணன், மாமன்னன் ஆகிய படங்கள் பேசிய சப்ஜெக்ட் மிக மிக அழுத்தமானது, ஆழமானது. ஆனால் அது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிக முக்கியமான படமாக வாழையை அவர் உருவாக்கியுள்ளார் என்பது படம் பார்த்தவர்கள் சொல்லும் கருத்துக்களும், அவர்கள் காட்டும் உணர்வுகளும் சொல்லாமல் சொல்கின்றன.


இயக்குநர்கள் பலரும் இப்படத்தைப் பற்றி வியந்து பேசி வருகிறார்கள். அதில் முக்கியமானதாக சொல்லப்படுவது இயக்குநர் மணிரத்தினம் இப்படம் குறித்து நெகிழ்ந்து வியந்து பேசியதுதான். இதோ இப்போத பாலா உருகிப் போயுள்ளார். வாழை படத்தை பாலாவுக்காக பிரத்யேகமாக போட்டுக் காட்டினார் மாரி செல்வராஜ். அவருடன் அமர்ந்து படத்தையும் பார்த்தார். படம் பார்த்து முடித்து விட்ட பிறகு பாலா எதுவுமே பேசவில்லை. அப்படியே மாரி செல்வராஜை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு அப்படியே சில விநாடிகள் அவரை அணைத்துக் கொண்டார். பின்னர் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுத் தட்டிக் கொடுத்தார்.


அதன் பிறகு இருக்கையில் போய் அமர்ந்த பாலா, மாரியின் கைகளைப் பிடித்தபடி அப்படியே நெடு நேரம் அமர்ந்துள்ளார். எதுவுமே பேசவில்லை. பேச முடியாத அளவுக்கு உணர்வுப்பூர்வமாக காணப்பட்டார் பாலா. அவரது கைகள், மாரியின் கைகளை அழுந்தப் பிடித்தபடி இருந்தது. அந்தக் கைகள் பிடித்திருந்த விதத்தைப் பார்த்தபோது அவரது உணர்வுகளை அழுத்தமாக மாரியிடம் அவர் கடத்தியதை நாம் உணர முடிந்தது.


ஒவ்வொரு படைப்பும் பேச வைக்கும்.. பேசவே முடியாத அளவுக்கு ஒரு கலைஞன் உறைந்து போகிறான் என்றால் அந்தப் படைப்பு மாபெரும் வரலாறு என்றுதான் சொல்ல வேண்டும்.. அந்த வகையில் மாரியின் வாழை, மிகப் பெரிய வரலாறு படைக்கப் போகிறது என்பதை மட்டும் உறுதியாகத் தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்