Director Bala.. எங்கே செல்லும் இந்தப் பாதை.. 25 வருடமாக யாருக்கும் வணங்கானாக வலம் வரும் பாலா!
சென்னை: சேது படம் நேற்றுதான் வந்தது போல உள்ளது. ஆனால் 25 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் பாலா. சேது முதல் வணங்கான் வரை அவரது திரைப்பயணம் மிகப் பெரிய பொக்கிஷம்.. தமிழ் சினிமாவுக்கு. தற்போது அவர் இயக்கி வரும் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் சேர்த்து அவரது திரைத்துறை சில்வர் ஜூப்ளியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் என்றால் அதில் பாலாவும் ஒருவர். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றவர். பி ஸ்டுடியோ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகக் கலைஞராக வலம் வருபவர்.
இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சோகத்தையும், கோபத்தையும் தழுவியதாகவே இருக்கும். அதுதான் அவரது பலமாகவும் இருந்திருக்கிறது. தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாதவர், யாருக்காகவும் தனது கதை சொல்லும் ஸ்டைலை சமரசம் செய்து கொள்ளாதவர். திரையுலகின் ரியல் வணங்கான் இவர்தான்.
முதன் முதலில் பாலா இயக்கிய சேது திரைப்படம் ஒரே நாளில் நடிகர் விக்ரமை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய அந்தஸ்தை பெற்று தந்தது. இப்படத்தில் சிவக்குமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் பிரதிபலிப்புகள் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தது. இளையராஜாவின் இசை இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. இப்படத்தில் விக்ரமின் நடிப்பை சினிமா துறையே திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படி ஒரு நடிப்பு திறமை விக்ரமுக்குள் ஒளிந்திருக்கிறதா என திரை கலைஞர்கள் பலரும் வியந்து பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து நந்தா திரைப்படத்தை இயக்கினார் பாலா. இப்படத்தில் சூர்யா லைலா, ராஜ்கிரன், கருணாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தினர். பாலாவின் முத்திரைப் படங்களில் இதுவும் முக்கியமானது. தாயிடம் கிடைக்காத அன்பு காதலியிடம் இருந்து கிடைப்பதை மிகவும் நேர்த்தியாக சொல்லியிருப்பார் பாலா. கோபமும், மூர்க்கத்தனமும் நிறைந்த இளைஞனாக சூர்யா கதையோடு மாறியிருப்பார். அவருக்கு இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாகவே அமைந்தது. பெரும் திருப்புமுனைப் படம் இது.
முதல் இரு பட நாயகர்களான விக்ரம், சூர்யா மற்றும் லைலாவின் கூட்டணியில் பிதாமகன் படத்தை இயக்கினார் பாலா. இப்படத்தில் சித்தனாக கலக்கிய நடிகர் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டினர். வசனமே இல்லாமல் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. நடிகர் விக்ரமின் நடிப்பை எவ்வளவு பாராட்டினார்களோ அதற்கு இணையாக சூர்யாவின் நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டது. எவ்வளவுதான் மிருககுணம் கொண்டவராக இருந்தாலும் கோபம் கொண்டவனாக இருந்தாலும் அன்பு என்ற ஒன்று இருந்தால் அனைவரும் தன் வசியப்படுவார்கள் என்பதை மிகவும் அருமையாக தெளிவாக இயக்கியிருந்தார் இயக்குனர் பாலா.
சீரியஸ்னஸ் மட்டும் இல்லாமல், இப்படத்தில் காமெடியும் அசத்தலாக அமைந்திருந்தது. இன்றளவும் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் சிறந்த காமெடி அமைப்பும் இப்படத்தில் தான் உள்ளது. இப்படத்திற்காக நடிகர் விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
தொடர்ந்து ஆர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு நான் கடவுள் படத்தை இயக்கியிருந்தார் பாலா. இப்படத்தில் மாற்றுத் திறனாளிகளையும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தி, எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறார்கள், அவர்கள் படும்பாடு எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை சித்தரித்து மிக எளிமையாக சொல்லியிருப்பார் பாலா. அதே சமயத்தில் ஏழாவது உலகம் என்னும் புதினத்தை தழுவி இத்திரைக்கதை அமைய பெற்றிருந்தது. நடிகர் ஆர்யா வித்யாசமான தோற்றத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் அடுத்தடுத்த கதை நகர்வுகள் மிக அருமை என இயக்குனர் பாலாவை அனைவரும் வியந்து பாராட்டினர். இப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான இந்திய தேசிய விருதை தட்டிச் சென்றார் இயக்குனர் பாலா. அஜீத் நடிக்கவிருந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா மற்றும் விஷால் கூட்டணியில் அவன் இவன் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பழிவாங்கும் ஆக்ரோஷமான திரைக்கதை தான். ஆனால் இயக்குனர் பாலாவின் மாறுபட்ட கதாபாத்திரங்களின் நகர்வுகள் விறுவிறுப்பாக அமையப் பெற்றிருந்தது.
தொடர்ந்து அவர் இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்களில் வித்தியாசமான கதைகளை கொண்டும் உருவாகியிருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் மிக்கதாக அமைந்திருந்தது.
திரைத் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த படங்களை இயக்கி பல நடிகர்களுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் பாலா தற்போது வணங்கான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சியுடன் பாலாவும் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ரோஷினி, ஜான் விஜய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சிஎஸ் பார்த்துள்ளார்.
இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணம் மற்றும் வணங்கான் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, மிஸ்கின், விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா இயக்குனர் பாலா குறித்து பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைக் கலைஞர்களில் ஒருவரான பாலா அத்தனை பாராட்டுகளுக்கும் பொருத்தமானவர்.. அவரைப் பாராட்டுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்