Just Retired.. ஸ்டைலிஷ் தினேஷ் கார்த்திக்.. 6 அணிகள்.. ஸ்வீட் 16 ஆண்டுகள்!

Su.tha Arivalagan
May 23, 2024,09:53 PM IST

டெல்லி:  16 ஆண்டு கால ஐபிஎல் பயணத்தை நேற்று தோல்வியுடன் முடித்துள்ளார் ஸ்டைலிஷ் வீரரான தினேஷ் கார்த்திக்.


எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல அமைந்து விடாது. ஒரு நல்ல வெற்றியுடன் நமது கெரியரை முடிக்க வேண்டும் என்றுதான் எந்த ஸ்போர்ட்ஸ்மேனாக இருந்தாலும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அது அமைவதில்லை. வெகு சிலருக்கே அவர்கள் விரும்பியபடி ஓய்வு அமையும்.


இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்றான தினேஷ் கார்த்திக்கின் ஓய்வும் கூட அப்படித்தான் வந்துள்ளது. ஒரு வரலாற்றுச் சாதனையுடன் ஐபிஎல்லை விட்டு விடைபெற ஆர்வமாக இருந்தார். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்று கோப்பையையும் வென்றிருந்தால், அதுதான் அந்த அணிக்கு முதல் கோப்பையாக இருந்திருக்கும். கடந்த 16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்ல முடியாத திகழ்கிறது பெங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது.




ஆனால் நடப்பு தொடரில் பெங்களூரு அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்த வேகத்தைப் பார்த்தபோது பலரும் இந்த முறை கப் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். சில வீரர்களின் அதிரடியான ஆட்டமும் அந்த நம்பிக்கையைக் கூட்டியது. தினேஷ் கார்த்திக் அந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய விதம் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்து விட்டது.


தினேஷ் கார்த்திக்கும், தோனியும் கிட்டத்தட்ட சம கால வீரர்கள். வயதில் தோனி மூத்தவராக இருந்தாலும் கூட தினேஷ் கார்த்திக் அனுபவத்தில் சற்று மூத்தவர். தோனி லைம் லைட்டுக்கு வருவதற்கு முன்பே இந்திய அணியில் இடம் பிடித்தவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வருகையாலும், அவருக்குக் கிடைத்த தொடர் வாய்ப்புகளாலும், அவரது அதிரடி ஆட்டத்தாலும், தினேஷ் கார்த்திக் மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு முற்றிலும் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலைக்குப் போய் விட்டார் தினேஷ் கார்த்திக்.


ஐபிஎல் வந்த பிறகு அதில் தனது முத்திரையை பதிக்க ஆரம்பித்தார் தினேஷ் கார்த்திக். அதன் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. அதுவும் கூட அவ்வப்போதுதான். அப்படியும் இப்படியுமாக தேசிய அணியில் வலம் வந்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல்லில் அசைக்க முடியாத வீரராக வலம் வந்தார்.


26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒரு நாள் போட்டிகள்,  56 டி20 போட்டிகள் மற்றும் 167 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக், ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடினார். மொத்தம் 4 சீசன் இந்த அணிக்காக ஆடியுள்ளார். அதைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக 2011ல் விளையாடினார். பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2 சீசன் ஆடினார். இதைத் தொடர்ந்து 2015ல் பெங்களூரு அணிக்கு மாறினார். அதன் பிறகு 2016, 17ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடிய அவர் 2018 முதல் 21 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக விளையாடினார். அப்போது அவரது ஆட்டம் அணிக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. 2022 முதல் இப்போதைய சீசன் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடி வந்தார். 


ஐபிஎல்லில் மொத்தம் 257 போட்டிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் 4842 ரன்களைக் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் என்றால் அது ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தது. அவரது பேட்டிங் சராசரி 26.32. ஸ்டிரைக்கிங் ரேட் 135.36. 22 அரை சதங்கள் எடுத்துள்ளார். 161 சிக்ஸர்கள், 466 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ஒரு சீசனில் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்றால் அது 2013ம் ஆண்டு தொடரில் குவித்த 510 ரன்கள்தான். அதேபோல 2018 தொடரிலும் 498 ரன்களைக் குவித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.




நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் மீண்டும் வெளியேறியது. இதனால் நேற்றைய போட்டியே தினேஷுக்கும் கடைசிப் போட்டியாக மாறி விட்டது. மைதானத்தில் இருந்த அத்தனை பேரும் எழுந்து கை தட்டி உற்சாகப்படுத்தி தினேஷ் கார்ததிக்குக்கு பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சி அடைய வைத்தது.


இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு அருமையான வீரர் தினேஷ்.. தனக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடக் கூடிய வெகு சில அரிதான வீரர்களில் தினேஷும் ஒருவர். நல்ல விக்கெட் கீப்பர், அதிரடியான பேட்ஸ்மேன், நல்ல மனிதர்.. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.. எல்லாவற்றுக்கும் ஒருநாள் ஓய்வு உண்டு.. தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட்டுக்கும் இப்போது ஓய்வு வந்துள்ளது.. ஆனால் அவரிடமிருந்து கிரிக்கெட் அத்தனை சீக்கிரம் போய் விடாது.. கமென்ட்டேட்டராக அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.. வாழ்த்துகள் DK.. இத்தனை காலம் நீங்கள் கொடுத்த அருமையான கிரிக்கெட்டுக்கு!