"சின்னப் பென்சில் என்ன செய்து விடும்".. இதனால்தான் ஆசிரியர்கள் கடவுள்கள்!
Sep 06, 2023,10:28 AM IST
சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று முழுவதும் வாழ்த்துகள், புகழாரங்களைப் பார்த்தோம்.. அதில், ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் போட்டுள்ள டிவீட் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஒரு சமுதாயம் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், கடமை தவறாமலும் இருக்க முக்கியப் பங்காற்றுபவர்கள் ஆசிரியர்கள்தான். குறிப்பாக பள்ளி ஆசிரியர்களைப் போன்ற தியாகிகளை எங்குமே பார்க்க முடியாது. எந்தவித எதிர்பார்ப்பும், பிரதிபலனும் இல்லாமல் அவர்கள் கொடுக்கும் உழைப்பும், மாணவர்களை முன்னேற்றக் காட்டும் அர்ப்பணிப்பும் வேறு யாரிடமும் பார்க்க முடியாதது
தாய், தந்தையை விட, நண்பர்களை விட ஏன் கடவுள்களை விட ஆசிரியர்கள்தான் உயர்ந்தவர்கள். அவர்கள் போதிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்ற உதவுகிறது.. அவனால் சமுதாயம் ஏற்றம் பெறுகிறது.. இத்தனைக்கும் வித்திடுபவர்கள் ஆசிரியர்கள்தான்.
ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று பள்ளிகள் தோறும் மாணவர்கள் மாணவியர், முன்னாள் மாணவ மாணவியர் தங்களது பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை அளித்தனர், நன்றி கூறி மகிழ்ந்தனர், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் வேதாராண்யத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான செல்வசிதம்பரம் என்பவர் டிவிட்டரில் போட்டிருந்த ஒரு பதிவு அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.
ஆசிரியர் செல்வம் போட்டிருந்த பதிவு இதுதான்:
இன்று நிறைய மாணவர்கள் சாக்லேட்,பேனா போன்றவைகளை நான் பள்ளியில் நுழைந்தவுடன் தந்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். வேகேஷ் ஆறாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் நான் எதுவும் உங்களுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வரலை சார் என்றார். அதனாலென்ன கைகொடுத்து வாழ்த்துகள் கூறினால் போதும் என்றேன்.
மதியத்திற்கு மேல் என்னைத்தேடி தயங்கி தயங்கி நான் ஒரு கிஃப்ட் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். வண்ண பென்சில்களை வைத்து ஹார்ட்டின் வரைந்து வாழ்த்து அட்டை தந்தார். அவருக்கு முகமெல்லாம் புன்னகை. அதைவிட எனக்கு மிகப்பெரிய அன்பளிப்பை பெற்ற மகிழ்ச்சி.
வேகேஷ் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்.அதனால் அவர் மீது தனி கவனம் எனக்கு உண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்து பேசுவேன். பள்ளிக்கு வந்ததும் தேடிப்பிடித்து எனக்கு வணக்கம் வைத்துப்போவார். இவர் மெல்ல மலரும் குழந்தை (slow learner) ஆறாம் வகுப்பு வந்த பிறகுதான் பெரு முயற்ச்சிக்கு பின் எழுத்துக்கூட்டி படிக்க எழுத தொடங்கியுள்ளார்.
வேகேஷ் வெல்வார்.