அமர்க்களமான பூஜையுடன் தொடங்கிய தோனியின் முதல் படம்.. ரசிகர்கள் ஹேப்பி!

Baluchamy
Jan 28, 2023,02:09 PM IST
சென்னை: முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார். இம்முறை அவர் ஆடுகளத்தை மாற்றியுள்ளார். திரைக்களத்திற்கு வந்துள்ளார்.. ஒரு தயாரிப்பாளராக.



கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படமாக "எல்ஜிஎம்" உருவாகிறது. அதாவது Lets Get Married என்பது அதன் விரிவாக்கம்.

இப்படத்தின் பூஜை நேற்று விமரிசையாக நடந்தது. இதில் தோனியின் மனைவி சாக்ஷி கலந்து கொண்டார். படத்தில் ஹீரோவாக நடிப்பது ஹரீஷ் கல்யாண். அவருக்கு ஜோடியாக இவானா நடிக்கிறார். நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் படத்தில் இடம் பெற்றுள்ளனர். பட பூஜையில் தோனி கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் சாக்ஷி கலந்து கொண்டது ரசிகர்களை குஷியாக்கியது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, ரசிகர்களால் கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். 2003ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்றார்.

இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற பின் தோனியின் கேப்டன்ஷிப்பில் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என ஏகப்பட்ட வெற்றி கோப்பைகளை குவிக்க இந்திய அணிக்கு அது ஒரு பொற்காலமாக இருந்தது.

சிறந்த கேப்டன் என அனைவராலும் கொண்டாடப்பட்ட தோனி, தனது அதிரடி பேட்டிங் மூலம் பவுலரை பதம் பார்ப்பார். பேட்டிங்கில் பொளந்துகட்டும் தோனி, விக்கெட் கீப்பிங்கில் மட்டும் சும்மாவா! என சொல்வது போல் ஒளியை விட வேகமாக இருக்கும் இவரின் ஸ்டெம்பிங்கிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இப்படியாக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற தோனி, 2020ம் ஆண்டு சர்வ்தேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இனி தோனியை கிரிக்கெட் மைதானத்தில் பார்க்கவே முடியாதா என சோகத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு நாங்க இருக்கோம்! என கூறுவது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நீடிப்பார் என சென்னை அணியின் நிர்வாகம் தெரிவித்தது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தோனிக்கு ஏகப்பட்ட ஃபென்ஸ் இருந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் என்பதால் தோனிக்கும், தமிழ்நாட்டிற்குமான பந்தம் மேலோங்கியது. தமிழ் ரசிகர்களின் அலாதி அன்பில் மூழ்கிய தோனி, தமிழ்நாடு தான் என்னுடைய இரண்டாம் தாய் வீடு என பலமுறை குறிப்பிட்டுள்ளார். 

இப்படியாக தமிழ் மக்களுக்கும், தோனிக்குமான பாசப்பிணைப்பு இருக்கும் நிலையில், தோனி சில நாட்களுக்கு முன் 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபின் என்னுடைய முதல் படத்தை தமிழில் தான் எடுப்பேன் எனவும் கூறினார். இப்போது பூஜையைப் போட்டு விட்டார்.. இனி என்ன பட்டையைக் கிளப்ப வேண்டியதுதான்.