இளையராஜா பயோ பிக் மட்டும் இல்லை.. ரஜினி வரலாற்றிலும் நடிக்கணும்.. தனுஷ் ஆசை!

Meenakshi
Mar 20, 2024,06:23 PM IST

சென்னை: நான் நடிக்க ஆசைப்பட்டது 2 பேரின் வாழ்க்கை வரலாற்று படத்தில். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், மற்றொருவர் இளையராஜா சார். ஒரு கனவு நனவாகி விட்டது. இது எனக்கு மிகப் பெரிய கர்வத்தை கொடுக்கிறது என்று பேசியுள்ளார் நடிகர் தனுஷ்.


தனது இசையால் உலக மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 1000த்திற்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் இசைஞானி. பல்வேறு விருதுகளை பெற்றவர்.  தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். இத்தகைய சிறப்புடையவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று பிரமாண்டமாக நடந்தது. 




தனுஷ்தான், இளையராஜாவாக நடிக்கவுள்ளார். விழாவில் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தனுஷ் பேசுகையில், எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் நம்புகிறேன். அதையே அடிக்கடி சொல்வேன். நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லை என்றால், இளையராஜாவின் பாடைலக் கேட்டு மெய் மறந்து தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாகவே நடித்தால் எப்படியிருக்கும் என நினைத்து நினைத்து எண்ணி தூக்கமில்லாமல் இருந்திருக்கின்றேன்.


இருவரின் வாழ்க்கை வரலாற்றை நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.  ஒன்று இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒன்று நடக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்பது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை கொடுக்கிறது. நான் இளையராஜாவின் பக்தன். அவரின் இசை தான் எனக்கு துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். 




இதைத் தாண்டி அவரது இசை எனக்கு நடிப்பு ஆசானும் கூட. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் இருந்து இன்றுவரை ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்பு அந்த காட்சிக்கு தகுந்த மனநிலை இருக்கும் இளையராஜாவின் பாடலையோ, பிஜிஎம் மையோ கேட்பேன்.  இந்த இசை அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும். அதனை அப்படியே உள்வாங்கி நடிப்பேன். 


இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய சவால் பொறுப்பு என கூறுகிறார்கள் எனக்கு அப்படி தோன்றவில்லை. ஏனென்றால், அந்த இசை இன்னும் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும் தற்போது நடந்து வரும்போது கூட இளையராஜாவுடன் நீங்கள் முன்னாடி போங்கள் நான் தொடர்ந்து வருகிறேன் என்று சொன்னேன். நான் என்ன உனக்கு கைடா என்று கேட்டார். ஆம் நீங்கள் தான் வழி நடத்தி வருகிறீர்கள். 




விடுதலை படத்தின் பாடல் பதிவின்போதும் இளையராஜாவிடம் நீங்க இங்கேயே இருப்பீங்களா? என கேட்டேன். நான் எப்போ உன் கூட இல்லை என கேட்டார். அது உண்மை தான். ஒரு கலைஞனாக இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இந்த அழைப்பு இளையராஜாவிடம் இருந்து வந்தது கூடுதல் மகிழ்ச்சி. இசையின் கடவுளாக நடிக்கும் வாய்ப்பை நினைத்து நெகிழ்கிறேன் என்றார்.