"30 லட்சம் ஃபைன் கட்டுங்க.. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்.. ஏர் இந்தியாவுக்கு தண்டனை!

Baluchamy
Jan 21, 2023,09:19 AM IST

டெல்லி: ஏர் இந்தியா விமான பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  


கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பிசினஸ் கிளாசில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி தன்னுடன் பயணித்த சக பெண் பயணியின் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து அப்பெண் விமான ஊழியர்களிடம் புகார் கொடுத்தும் கூட பெரிய  அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் கோபமான அப்பெண் பின்னர் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கே கடிதம் எழுதி தனது குமுறலை வெளியிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது. 


பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இணையத்தில் தீயாக பரவ பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்பும் குவிந்தது. இதையடுத்து டிஜிசிஏ நடவடிக்கையில் இறங்கியது. சங்கர் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முறையாக செயல்படாத ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதத்தை  டிஜிசிஏ விதித்துள்ளது.  


மேலும் பாதிக்கப்பட்ட பயணி புகார் கொடுத்ததும் கண்டுகொள்ளாத ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநருக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.