திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் 2024... எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும் ?

Aadmika
Mar 24, 2024,11:23 AM IST

தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது. பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். தமிழ் மாதங்களில் 12 வது மாதமான பங்குனி மாதமும், நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் பங்குனி உத்திரமாகும். பன்னிரு கைகளைக் கொண்டு பக்தர்களை காப்பவர் தமிழ் கடவுளான முருகப் பெருமான் என்பதால் பங்குனி உத்திரம் முருகப் பெருமானுக்குரிய முக்கிய வழிபாட்டு நாளாக சொல்லப்படுகிறது. 


இந்த வருடம் மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இது பங்குனி 12 ம் தேதி வருவது இன்னும் விசேஷமாகும். பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீனாட்சி- சுந்தரேஸ்வரர், ராமன் - சீதை, முருகன் - தெய்வானை, கிருஷ்ணர் - ராதை, ரங்கநாதர் - ஆண்டாள் உள்ளிட்ட தெய்வ திருமணங்கள் நடைபெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.  அதனால் பங்குனி உத்திர விரதத்திற்கு கல்யாண விரதம், கல்யாண சுந்தரர் விரதம் என்று பெயர். அதோடு மகாலட்சுமி தேவி, சுவாமி ஐயப்பன் அவதரித்ததும் இதே பங்குனி உத்திர நாளில் தான். 


பங்குனி உத்திர விரதம் இருக்கும் முறை :




* பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம்.


* பங்குனி உத்திரத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும்.


* நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.


* பங்குனி உத்திரத்தன்று கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.


* வேலை உள்ளவர்கள் ஓம் சரவண பவ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன்மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.


* நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கும் செல்லலாம்.


பங்குனி உத்திர திருமண விரதம் :


திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திர விரதமிருந்து இறைவனை வழிபட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கைகூடும். மேலும் சிறப்பான நல்லதொரு வரன் கைகூடிவரும். திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திர விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் விலகும். கணவன்-மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும்.


பலன்கள் :


பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.  கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும். உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.