Maharashtra CM .. 3வது முறையாக மகாராஷ்டிரா முதல்வராக.. தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு!

Su.tha Arivalagan
Dec 05, 2024,06:19 PM IST

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியில் அமர்வது இது 3வது முறையாகும்.


மகாராஷ்டிர முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர்கள், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழில்துறையினர், ஷாருக்கான் உள்ளிட்ட திரைத்துறையினர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு உலகினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




முதலில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.


முன்னதாக முதல்வர் பதவிக்காக முட்டி மோதி வந்தார் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. ஆனால் பாஜக முதல்வர் பதவியைத் தர மறுத்து விட்டது. தங்களது கட்சியே அதிக இடங்களில் வென்றுள்ளதாலும், ஏற்கனவே நீங்கள் முதல்வராக இருந்து விட்டதாலும், துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பாஜக சமரசம் பேசியது. வேறு வழியில்லாததால் இதை ஏற்றுக் கொண்டு தற்போது துணை முதல்வராகியுள்ளார் ஷிண்டே.




அஜீத் பவாரைப் பொறுத்தவரை பெரிய பதவியை எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை மீண்டும் பாஜக தந்திருந்தால் அவர் பிரச்சினை செய்திருக்கக் கூடும். ஆனால் பாஜக வே முதல்வர் பதவியை வைத்துக் கொள்ள முடிவெடுத்ததால், மகிழ்ச்சியாக துணை முதல்வர் பதவியை அஜீத் பவார் ஏற்றுக் கொண்டுள்ளார்.


சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்