அரசின் நல உதவிகளை விளக்கி.. பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி..ஆசிரியர்கள் சூப்பர் பிரச்சாரம்!

Manjula Devi
Jun 08, 2024,03:15 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.


ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று சிறு வயதிலேயே வேலை செய்து படிக்காத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி வருவர்.




அந்த வரிசையில் தலைமையாசிரியர் லெ சொக்கலிங்கம் தலைமையில் சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்து மினாள், முத்துலட்சுமி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி சேர்க்கையை வலியுறுத்தி பேசியுள்ளனர்.


அப்போது ஆசிரியர்கள் பள்ளியின் சிறப்புகளை தெளிவாக எடுத்துக் கூறி இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வண்ண கலர் பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்துவிதமான கல்வி தொடர்பான  உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது எனக் கூறியுள்ளனர். 




இதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொண்டனர்.