பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் புகுந்த.. துணை தாசில்தார்.. இதுதான் காரணமாம்!

Su.tha Arivalagan
Jan 23, 2023,04:00 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் வீட்டுக்குள் ராத்திரியில் புகுந்த துணை தாசில்தார் ஆனந்த் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.


பதவி உயர்வு தொடர்பாக ஸ்மிதா சபர்வாலுடன் ஆலோசனை நடத்துவதற்காக வீட்டுக்குள் புகுந்ததாக கூறியுள்ளார் ஆனந்த் ரெட்டி. அவருக்குத் துணையாக வந்து காரில் வெளியில் காத்திருந்த ஆனந்த் ரெட்டியின் நண்பரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஸ்மிதாவின் பங்களா உள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து நேற்று டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் ஸ்மிதா சபர்வால். இதுகுறித்து அவர் கூறுகையில்,  மிகவும் அபாயகரமான அனுபவத்தை நான் சந்திக்க நேரிட்டது. இரவில் ஒருவர் எனது வீட்டுக்குள் புகுந்து விட்டார். எனது சமயோஜிதத்தால் என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். என்னதான் உங்களது வீடு பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும், படுக்கப் போவதற்கு முன்பு கதவுகள், ஜன்னல்கள் சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ஸ்மிதா.


ஸ்மிதா சபர்வால் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனந்த் ரெட்டி, மல்கஜ்கிரி மாவட்டம் மெட்சால் பகுதியில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு தொடர்பாக அவர் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்கு வந்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு எதற்கு ராத்திரியில் வீடு புக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.