100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Oct 01, 2024,04:32 PM IST

விருதுநகர்: 3 ஆண்டுகளில் 1300 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.38 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப்பட உள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர். இவ்விழாவில் விளையாட்டு போட்டிகளில் பெற்றி பெற்ற 2111 வீரர்களுக்கு ரூ.42.96 கோடி மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கினார். முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.39 கோடியில்  இலவச வீட்டுமனை பட்டாகளையும் வழங்கினார்.




இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், துணை முதல்வராக நியமித்த பிறகு சென்னைக்கு வெளியே கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி என்பதால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். 18 மாவட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 


தென்மாவட்டம் என்றாலே வீரத்திற்கு பெயர் போனவை வீர விளையாட்டுக்கும் பெயர் போனவை.  கேலோ இந்தியா, கார் பந்தயம் உள்ளிட்டவை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பல துறைகளில் முன்னணியில் உள்ளோம் என ஒன்றிய அரசின் நிதி ஆயோ புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு அதிகம் உள்ள மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிற்கே தமிழகம் தான் வழிகாட்டியாக முன்னோடியாக உள்ளது. 




யாராலும் வீழ்த்த முடியாத ஆல் ரவுண்டராக தலைவர் கலைஞர் இருந்தார். அதனால் தான் கலைஞர் பெயரில் விளையாட்டு உபகரணம் வழங்கி உள்ளோம். விருதுநகர், கோவில்பட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உருவாகி உள்ளனர். இன்னும் உருவாகி வருகின்றனர். செஸ் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த முகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி பெருமை தேடித்தந்துள்ளனர். 


கடந்த மூன்று ஆண்டுகளில் 1300 விளையாட்டு வீரர்களுக்கு 38 கோடி ரூபாய் ஊக்க தொகையை முதல்வர் வழங்கி உள்ளார். தொடர்ச்சியாக விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு பணி வழங்க உள்ளோம் என தெரிவித்துள்ளோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்