கமல்ஹாசனுடன்.. நேற்று பி.கே.சேகர்பாபு.. இன்று உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. எம்.பி. சீட் இருக்கா?
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சந்தித்துப் பேசிய நிலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இருப்பினும் அதைத் தாண்டி அரசியலும் கூட பேசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக முக்கியமாக ஏதாவது விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம் என கூறி இருக்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என கூறியுள்ளார்.
ஆனால் கமல்ஹாசன் மற்றும் உதயநிதியின் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டிருக்கலாமோ என்ற பேச்சும் அடிபடுகிறது. ஏனெனில் விரைவில் ராஜ்ய சபா தேர்தல் வரை இருக்கின்றது. இதில் தமிழ்நாட்டில் ஆறு பேருடைய பதவிக்காலம் முடியவுள்ளது. திமுக சார்பாக 4 எம்பிக்களை தேர்வு செய்யலாம். இதில் ஒரு இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு ஒதுக்குவதாக ஏற்கனவே கடந்த லோக்சபா தேர்தலின் போது உடன்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பான இந்த சந்திப்பா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேசமயம், இந்த சந்திப்பின்போது 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் வியூகம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தீவிர அரசியலில் சமீப காலமாக ஈடுபடவில்லை. கட்சி சார்பில் பெரிய அளவில் எந்த செயல்பாடுகளும் இல்லை. கமல்ஹாசனும் கூட நடிப்பில் தீவிரமாக உள்ளார். அமெரிக்கா சென்றது கூட ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளத்தான். இந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவாரா என்ற கேள்வியும் உள்ளது. இந்த சூழலில்தான் திமுக தரப்பிலிருந்து அடுத்தடுத்து தலைவர்கள் அவரை சந்தித்துள்ளனர். எனவே இது பேசு பொருளாகியுள்ளது.