Wait and See.. பவன் கல்யாணுக்கு பளிச் பதில் கொடுத்த.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Su.tha Arivalagan
Oct 04, 2024,06:14 PM IST

சென்னை:  திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி வரும் நிலையில் அதை வைத்து தீவிரமாக அரசியல் செய்து வரும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணம் திருப்பதியில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினை சம்பந்தமில்லாமல் சீண்டி பேசியுள்ளார். இதற்கு படு கூலாக பதிலளித்துள்ளார் உதயநிதி.


சனாதனத்தை அழிப்போம் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் சொல்லி வருகிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். அதை மலேரியா, வைரஸ் என்று சொல்லாதீர்கள். அதை அழிப்போம் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால், அவர்கள்தான் அழிவார்கள் என்று பவன் கல்யாணம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் வைத்து சம்பந்தமில்லாமல் உதயநிதியை சாடியது ஏன் என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மதுரையில் ஒரு வழக்கறிஞர் இதுதொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பவன் கல்யாண் மீது புகாரே கொடுத்துள்ளார்.




திருப்பதி லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் பவன் கல்யாண். 11 நாள் விரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.. தனது இரு மகள்களுடன் திருப்பதி மலைப்படி வழியாக திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இதையடுத்து திருப்பதியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். காவி உடை அணிந்து கலந்து கொண்ட அவர் உதயநிதி ஸ்டாலின் முன்பு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசி சவால் விட்டார்.


பவன் கல்யாண் கூறுகையில், சனானதன தர்மத்தை வைரஸ் என்று சொல்லாதீர்கள். அதை அழித்து விடுவோம் என்று சொல்லாதீர்கள். தமிழ்நாட்டில் இப்படி ஒருவர் பேசியுள்ளார். அவருக்கு நான் பதில் சொல்கிறேன்.. தமிழில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தெலுங்கிலேயே சொல்கிறேன். யாராவது அவருக்கு அதை மொழி பெயர்த்துச் சொல்லுங்கள். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. யாராவது அப்படி முயன்றால், அது உங்களை அழித்து விடும் என்றார் பவன் கல்யாண்.


இந்த நிலையில் பவன் கல்யாண் இப்படிப் பேசியது குறித்து  இன்று சென்னையில் செய்தியாளர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, படு கூலாக,  "Let's wait and see" என்று சிரித்தபடி கூறி விட்டுக் கிளம்பினார் உதயநிதி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்