வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. வானிலை மையம் தகவல்

Manjula Devi
Dec 21, 2024,05:58 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த பகுதி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு  ஒரு சில இடங்களில்  மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.




இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 450 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு 440 கிலோமீட்டர் தெற்கிலும், ஒரிசாவின் கோபால்பூருக்கு 600 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கிலும்  உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு கடந்த 6 மணி நேரத்தில் 7 km என்ற வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது.


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என  தெரிவிக்கப்பட்டுல்ளது. 


ஏற்கனவே 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்