வங்கக்கடலில் வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் ஏற்கனவே உருவான அஸ்னா புயல் காரணமாக குஜராத் மாவட்டத்தில் பெருமழை பெய்து வருகிறது. நகரம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குஜராத் மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் சென்னையில் நேற்று திடீரென சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடலில் ஆந்திரா, தெற்கு ஒடிசா கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து விசாகப்பட்டினம் அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.
இதன் காரணமாக ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் பரவலாக லேசான மழை பெய்தது. மாலையில் பெய்த காற்றுடன் கூடிய பலத்த மழையால் சென்னையின் தட்பவெப்ப சூழல் ஜில்லென மாறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்