நடு "கோர்ட்"டில் சண்டை.. வாயை விட்ட சிந்து.. மல்லுக்கட்டிய மரீன்.. எச்சரித்த நடுவர்.. பரபரப்பு!
கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தின்போது கரோலினா மரீனுக்கும், இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கும் இடையே திடீர் சண்டை மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகின் 6ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரீனுக்கும், 12வது நிலை வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கும் இடையே போட்டியின்போது திடீர் வாய்ச்சண்டை மூண்டது. இதனால் சரமாரியாக பேசிக் கொண்டனர். இது கைச் சண்டையாக மாறி விடுமோ என்ற அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் நடுவர் எல்லோ கார்டு காண்பித்து எச்சரிக்கை விடுத்தார்.
கரோலினா மரீனும், பி.வி.சிந்துவும் நல்ல தோழமையுடன் பழகி வருவதாக இருவருமே சில காலத்திற்கு முன்பு கூறியிருந்த நிலையில் இப்படி இருவரும் கடுமையான வாய்ச்சண்டையில் இறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னாச்சு இருவருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
டென்மார்க் ஓபன் போட்டியின் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்திருந்தார் பி.வி.சிந்து. அவர் இதில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதேசமயம், அவரை விட வலிமையானவரான கரோலினா மரீன் இப்போட்டியில் மோதியதால் சற்று சந்தேகமும் இருந்தது. இந்த நிலையில் போட்டியின் நடுவே இருவருக்கும் திடீரென வாய்ச்சண்டை மூண்டது.
இப்போட்டியில் கரோலினா மரீன், 21-18, 19-21, 21-7 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். போட்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்தது. இப்போட்டியில் நிறைய தவறுகளைச் செய்தார் சிந்து. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மரீன். இதனால் போட்டி சிந்துவிடமிருந்து நழுவிப் போய் விட்டது. இது மரீனுக்கு எதிராக, சிந்துவுக்குக் கிடைத்துள்ள தொடர்ச்சியான 5வது தோல்வியாகும்.
இருவரும் 2016 ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் மோதியது நினைவிருக்கலாம். அப்போட்டி பலரையும் கவர்ந்தது. இருவரும் அத்தனை அழகாக ஆடினார்கள். நட்புறவையும் வெளிப்படுத்தினர். அதேபோல, 2018 உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியிலும் இருவரும் மோதியிருந்தனர்.
இந்தப் போட்டிகளின்போது இருவரும் அழகான நட்புறவை வெளிப்படுத்தியிருந்தனர். தாங்கள் நல்ல நட்புடன், தோழிகள் போல பழகுவதாக இருவருமே கூறியிருந்தனர். ஆனால் இருவருக்கும் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. டென்மார்க் போட்டியில் இருவரும் வெடித்துப் பொறுமி விட்டனர். இருவரும் வாய்ச்சண்டையில் ஈடுபட்டதால் குறுக்கிட்ட நடுவர் இருவரையும் எச்சரித்தார். இருவருக்கும் மஞ்சள் கார்டு காண்பித்தார்.
ஒவ்வொரு புள்ளி எடுத்தபோதும் மரீன் ஆவேசமாக கூச்சலிட்டதால்தான் பிரச்சினை வெடித்தது. இதுகுறித்து சிந்து, இரண்டு முறை மரீனை எச்சரித்தார். நடுவரும் இருவரையும் அழைத்து புள்ளிகள் எடுக்கும்போது அதை சத்தம் போட்டுக் கொண்டாடக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் இருவருமே அதைக் கேட்கவில்லை. மரீன் கத்தினால் பதிலுக்கு சிந்துவும் கத்தவே சண்டையாகி விட்டது.