தமிழ்நாட்டில் தொடர் பரவலில் டெங்கு.. அலர்ட்டா இருங்க மக்களே!

Meenakshi
Sep 14, 2023,02:43 PM IST
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது. 

தமிழ்நாடு மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 13 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபடுகிறது.



மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 வாரத்தில் மட்டும் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

தங்களது வீடுகள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தி ஆகும்  அளவுக்கு இல்லாத மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொதுமக்களும் போதுமான தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் கொசுப் பெருக்கத்தைக் குறைக்க முடியும். கூடவே டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.