கிராக்கி அதிகரிப்பு.. பயணிகள் வாகன விற்பனை கிடுகிடு உயர்வு!
டெல்லி: கிராக்கி அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் பயணிகல் வாகன விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது.
பல்வேறு திருவிழாக்கள் அடுத்தடுத்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி வருகிறது. தொடர்ந்து புத்தாண்டு வரப் போகிறது.. பல அலுவலகங்களில் இப்போது சம்பள உயர்வும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பலருக்கு போனஸ் கிடைக்கும் . இப்படி பல்வேறு காரணங்களால் வாகனங்கள் வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர்.
கிராக்கி அதிகரித்துள்ளதால், பயணிகள் வாகன விற்பனையும் அதிகரித்துள்ளதாம். இந்தியாவில் செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை அளவாக விற்பனை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கார்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது.
செப்டம்பர் மாத வாகன விற்பனை அளவானது 3 லட்சத்து 63 ஆயிரத்து 733 என்று இருந்துள்ளது. இது செப்டம்பர் மாத நிலவரத்தைப் பொறுத்தவரை அதிக அளவாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 700 வாகனங்கள் விற்றதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை செப்டம்பர் மாதம் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.