டெல்லி பல்கலைக்கழக முகல் தோட்டத்தின் பெயர் திடீர் மாற்றம்!

Su.tha Arivalagan
Jan 31, 2023,04:18 PM IST
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தின் பெயர் கெளதம புத்தர் நூற்றாண்டு தோட்டம் என மாற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை முகல் கார்டனின் பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த தோட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.



குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான தோட்டம் உள்ளது. இதற்குப் பெயர் முகல் கார்டன். ஆங்கிலேயரான  எட்வின் லூட்யன்ஸ் இதை வடிவமைத்தவர் ஆவார். இந்த தோட்டத்தில் நூற்றுக்கணக்கான ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் உள்ளன. இந்த தோட்டம் ஆண்டுக்கு ஒருமுறை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த முகல் கார்டனின் பெயரை மத்திய அரசு சமீபத்தில் அம்ரித் உத்யான் என்று மாற்றி விட்டது. இது சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் கட்சி இந்த பெயர் மாற்றம், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வர்ணித்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு முகல் கார்டனின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு தோட்டம் உள்ளது. இதற்குப் பெயரும் முகல் கார்டன்தான். இந்த தோட்டத்தின் பெயரை தற்போது கெளதம புத்தர் நூற்றாண்டு தோட்டம் என்று மாற்றியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். அந்த தோட்டத்தில் ஏற்கனவே ஒரு புத்தர் சிலை உள்ளது. அதை முன்வைத்து தற்போது தோட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். ஆனால் குடியரசுத் தலைவர் மாளிகை முகல் தோட்ட பெயர் மாற்றத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று பல்கலைக்கழக பதிவாளர் விகாஷ் குப்தா கூறியுள்ளார். தோட்டத்தின் பெயரை மாற்றுவது என்பது நீண்ட காலமாக நடந்து வந்த விவாதம்தா என்று அவர் விளக்கியுள்ளார்.

இந்த தோட்டத்துக்கு ஏன் முகல் கார்டன் என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. இது முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது கிடையாது. அதேபோல முகலாயர் பாணியிலும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.