இந்த நிமிஷத்துல .. உலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரம்.. டெல்லிதான்!
டெல்லி: உலகிலேயே மிகவும் மோசமான டாப் 10 நகரங்களின் பட்டியலில் இந்த நிமிடத்தில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர மும்பை, கொல்கத்தா ஆகிய பிற இந்திய நகரங்களும் கூட டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியையும், காற்று மாசையும் பிரிக்கவே முடியாது. இந்த காற்று மாசுக்கு நிரந்தரத் தீர்வு காண என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை. சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க டெல்லி அரசும், மத்திய அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. இதுவரை எந்த பலனும் கிடைத்தபாடில்லை.
குளிர்காலங்களில் டெல்லியில் மாசு மிக மிக மோசமாக இருக்கும். தற்போதும் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐக்யூஏர் நிறுவனத்தின் காற்று மாசுக் குறியீட்டில் டெல்லிதான் உலகிலேயே மிகவும் மோசமான நகராக இன்று விளங்குகிறது.
இந்த நிறுவனத்தின் ரியல் டைம் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி 620 என்ற காற்று மாசுக் குறியீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் லாகூர் இருக்கிறது. ஆனால் அதன் மாசுக் குறியீடு 393தான். 4வது இடத்தில் கொல்கத்தா உள்ளது. அதன் மாசு குறியீடு 183 ஆகும். 6வது இடத்தில் மும்பை உள்ளது. டாப் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 நகரங்களும் உள்ளன. 10 நகரங்களில் 7 நகரங்கள் ஆசிய நாடுகள் என்பது இன்னொரு சோகமாகும்.