வெயில் காலங்களில் இனி பிற்பகல் பள்ளிக்கூடம் கிடையாது.. டெல்லி முடிவு
டெல்லி: டெல்லியில் கடும் கோடை காலங்களில் பிற்பகலில் பள்ளிக் கூடங்களை மூடி விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் வெப்பமான நகரங்களில் முக்கிய இடத்தில் இருப்பது டெல்லி. கோடை காலங்களில் மிகக் கடுமையான வெயிலும், வறட்சியும் தாண்டவமாடும். மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திப்பார்கள். இந்த நிலையில் வெயில் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லி பேரிடர் நிர்வாக ஆணையம் இப்போதே கூடி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி கோடைகாலங்களில் பிற்பகலுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெப்ப அலைகள் அதிகம் வீசும் பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களைச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான வெயில் தாக்கக் கூடிய பகுதிகளில் மாடிகளில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வீட்டுக்குள் வெப்பத்தை அதிக அளவில் ஊடுறுவ விடாமல் தடுக்க உதவும்.
இந்த நடவடிக்கைகளைக் கண்காணித்து அமல்படுத் அதிகாரி ஒருவர் விரைவில் அமர்த்தப்படவுள்ளார். அவரது பெயரை மத்திய அரசு அறிவிக்கும்.