எங்கய்யா இங்க இருந்த ரோட்டைக் காணோம்.. டெல்லியில்.. காலையிலேயே வெளுத்து வாங்கிய மழை!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை மக்கள் கண் விழித்துப் பார்த்தபோது ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருந்தது. அதிகாலையிலேயே செமத்தியான மழை பெய்து வெளுத்தெடுத்து விட்டதால். பல சாலைகளில் வெள்ளப் பெருக்காக இருந்தது.
தென் மேற்குப் பருவ மழை பார்ட் பார்ட்டாக நாட்டின் பல பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழைக்கு சிலர் பலியாகியுள்ளனர். மும்பை, புனே உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று காலை மழை வெளுத்து வாங்கி விட்டது. திடீர் கன மழையால் தலைநகரின் உட் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்காக காணப்பட்டது. சாலைகள் பல மழை நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. அடர்த்தியான மேகக் கூடடம் திரண்டிருந்ததால் சாலைகளில் வெளிச்சமில்லாமல் இருளோ என்றும் இருந்தது. தலைநகர் டெல்லிக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மழை ஜூலை 28ம் தேதி வரை தொடரும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆனந்த் விஹார், மலாய் மந்திர், நெளரோஜி நகர், சாந்தி பாத் உள்பட பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் தேங்கிக் காணப்பட்டது. நொய்டாவிலும் பல இடங்களில் கனத்த மழை பெய்துள்ளது. மழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளப் பெருக்கு காணப்படுவதால் போக்குவரத்து மாற்றங்களையும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.